ஆதிச்சநல்லூரில் அகழாய்வு குழிகள் மூடல் மீண்டும் ஜனவரி மாதம் பணி துவங்கப்படும் என அறிவிப்பு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி கடந்த மே 25 ந்தேதி துவங்கியது. இதன்மூலம் சுமார் 70க்கு மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டது. ஆதிச்சநல்லூரில் அதிகமான தொல்லியல் பொருள்கள் கிடைத்தன. ஆதிச்சநல்லூர், தொல்லியல் வரலாற்றில் இந்தியாவிலேயே முதல் முதலில் ஆய்வு நடந்த இடம். ஆனால் இதன் ஆய்வு அறிக்கை துரதிஷ்டமாக வெளியிடாமல் உள்ளது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த தொல்லியல் இயக்குனர் பாஸ்கர், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் மக்கள் வாழ்விடத்தினை கண்டு பிடித்துள்ளனர். இது ஆதிச்சநல்லூர் தொல்லியல் வரலாற்றில் முககிய மைல் கல் என்றே கூறலாம். இதனால் இந்திய தொல்லியில் துறையினரின் பார்வை ஆதிச்சநல்லூரில் விழுந்துள்ளது. மேலும் தற்போது நடந்த ஆய்வு மத்திய தொல்லியல் துறையினர் பாதுகாத்து வைத்திருக்கும் 114 ஏக்கருக்குள் நடைபெறவில்லை. மாறாக வெளியே தான் நடைபெற்று உள்ளது.
எனவே அடுத்து அகழாய்வு 114 ஏக்கருக்குள் நடந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மத்திய பட்ஜெட்டில் அறிவித்தப்படி சைட் மியூசியம் விரைவில் அமைக்கவேண்டும், 2004ல் நடந்த அகழாய்வு அறிக்கை உடனே தரவேண்டும் என கோரிக்கையை மதுரை உயர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆதிச்சநல்லூர் ஊருக்குள் நடந்த அகழாய்வு குழிகள் அனைத்தும் மூடப்பட்டது. இறுதியாக கருங்குளம் பஞ்சாயத்து புளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகில் உள்ள குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இங்கு எடுத்த பொருள்களை பட்டியலிட்டு, குறிப்பெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு இடங்களுக்கும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருள்களின் தன்மை குறித்த ஆய்வு வெளியிடு ஆறுமாதங்களுக்குள் வெளியிடப்படும் என தெரியவருகிறது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஆதிச்சநல்லூர் ,சிவகளையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் அகழாய்வு பணி துவங்கும் எனவும் அதிகாரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
மாநில அரசு அறிக்கையை விரைவில் தரும் எண்ணத்தில் உள்ளனர். ஆனால் 2004 அகழாய்வு அறிக்கைத்தான் கேள்வி குறியாக உள்ளது. எனவே அந்த அறிக்கையும் விரைவில் அமைத்து, மத்திய அரசு அறிவித்த சைட் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் ஆய்வுக்கு மத்திய அரசு 114 ஏக்கருக்குள்நடத்த அனுமதி தரவேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.