செய்துங்கநல்லூரில் பஜாரில் மோசமாக இருந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் துவக்கம்.

செய்துங்கநல்லூரில் உள்ள மெயின்ரோட்டை வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையடுத்து சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
திருநெல்வேலி & திருச்செந்தூர் மெயின்ரோடு மிகவும் பிரசித்தி பெற்ற சாலை. இந்த சாலை வழியாகத்தான் திருச்செந்தூர் முருகன் கோயில், குலசேகரபட்டணம் கோயில், நவதிருப்பதி, நவகையலாயம், நவலிங்கபுரம், வனத்திருப்பதி உள்பட இந்து திருத்தலங்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில், காயல்பட்டணம் தர்க்கா உள்பட பல இடங்களுக்கு இந்த பகுதி வழியாகத்தான் மக்கள் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் செய்துங்கநல்லூர் பஜார் முதல், வாய்க்கால் பாலம் வளைவு வரை சாலைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்த சாலையை வாய்க்கால் பாலத்தில் இருந்து இந்தியன் வங்கி வரை சீரமைத்து புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிக்காக 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியானது துவங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் தினமும் செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.