செய்துங்கநல்லூர் அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய் சாவு

ஸ்ரீவைகுண்டத்தில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய் சாவு.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் கள்ளவாண்ட கோவில் தெருவைச் சேர்ந்தவர் உலகுராஜ். விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா தேவி (வயது30). இவர்களுக்கு நெல்சன் ராபர்ட்(6), என்ற மகனும், அபிஷா (5), ஜெனிஷா (3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
நிர்மலாதேவிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் தனக்கு பின்னர் தன்னுடைய குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதினார்.
இதனால் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க கொடுத்தார். பின்னர் அவரும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார்.
இதனால் 3 குழந்தைகளும் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நிர்மலாதேவி மற்றும் அவருடைய 3 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நிர்மலாதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது 3 குழந்தைகளுக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி உள்ளாட்சி தேர்தலில் இந்த பகுதியில் அதிமுக ஒன்றிய வார்டு கவுன்சிலர் வேட்பாளராக களம் இறங்கி தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
===