சிவகளை, ஆதிச்சநல்லூரில் மார்ச் 15ம் தேதி அகழாய்வு பணிகள் ஆரம்பம். அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார்.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் வருகின்ற மார்ச் 15ம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. அகழாய்வு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைக்க உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். இந்த ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இந்த ஆதிச்சநல்லூரில் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. அதன்பின்னர் தற்போது வரை அந்த அகழாய்வின் அறிக்கை வெளியிடப்பட்ட வில்லை.
இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த அகழாய்வின் அறிக்கையை வெளியிட வேண்டும், இந்த பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என மற்றுமொரு வழக்கையும் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாககல் செய்தார். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.

மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் ஜனவரி மாதம் அகழாய்வு பணிகள் துவங்கியது. அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பணியாக தரையில் ஊடுருவும் ரேடார் கருவி மூலம் ஆதிச்சநல்லூரில் 100க்கு 100 மீட்டர் அளவில் ஒரு குழி அமைப்பதற்காகவும், அதே போல சிவகளையில் 50க்கு 50 மீட்டர் அளவில் 4 இடங்களில் அகழாய்வு பணிக்காக குழிகள் அமைப்பதற்காக அளவீடுகள் செய்யப்பட்டது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள புளியங்குளம் முதுமக்கள் தாழிகள் மையத்தை தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தொல்லியல் களத்தில் வருகின்ற மார்ச் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகழாய்வு பணியானது தொடங்கவுள்ளது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அகழாய்வு பணிக்காக ஆதிச்சநல்லூருக்கு ரூபாய் 28 லட்சமும், சிவகளை அகழாய்வு பணிக்காக ரூபாய் 32 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்ற இந்த அகழாய்வு பணியானது கிட்டத்தட்ட 8 மாதங்கள் நீடிக்கும் என்று தொல்லியல் அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

2005ல் நடந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிக்கான அறிக்கை தற்போது வரை வெளியிடப்படாத இந்த சூழலில் அடுத்த கட்டமாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது. சிவகளையில் அகழாய்வு பணி தற்போது துவங்கவுள்ளது. கிட்டத்தட்ட நீர் பரப்பு பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவிலும், நிலப்பரப்பு பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவிலும் மிகப்பெரிய தொல்லியல் களமானது சிவகளையில் உள்ளது குறிப்பிட தககது. அந்த தொல்லியல் களத்தில் முதன்முறையாக தற்போது அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. தொடர்ச்சியாக இந்த அகழாய்வு பணி நடைபெறும் போது கீழடியை விட மிக தொன்மையான நாகரீகம், தாமிரபரணி நாகரீகம் என்ற தகவல்கள் வெளிவரும் என்று தொல்லியல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்த பொதுநல வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது,

இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்த இடம் ஆதிச்சநல்லூர் தான். சுமார் 144 வருடங்களுககு முன்பே இங்கு கிடைத்த பொருள்கள் பெர்லின் நகர்கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது நாம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தொடுத்த காரணத்தினால் மத்திய மாநில அரசு ஆதிச்சநல்லூருககு ஆவண செய்துள்ளது. அடுத்த அகழாய்வை மாநில அரசு ஆரம்பித்துள்ளது. இவர்கள் கீழடியை ஆய்வு செய்து 23 மொழிகளில் அறிக்கை சமர்பித்தது போல ஆதிச்சநல்லூர் அறிககையும் உருவாகும் என்ற நம்பிக்கையுள்ளது. அதுபோலவே மத்திய அரசு சைட் மியூசியம் அமைக்க பணம் ஓதுக்கீடு செய்துள்ளது. இதனால் ஆதிச்சநல்லூர் புகழ் மேலும் பரவும் என்ற நம்பிக்கை பிறந்தது. இதற்கிடையில் 2004ல் அகழாய்வு செய்த போது கிடைத்த பொருள்களின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. அதன் முழுமையான அறிககை வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார்.

எனவே மிகப்பெரிய ஆர்வத்தோடு காத்திருந்த ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை தொல்லியல் களத்தில் வரும் 15ம் தேதி அகழாய்வு தொடங்கவிருப்பது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் துறை மாணவர்களுககு தொல்லியல் துறை ஒரு பாடமாக இருப்பதாலும், வரலாற்று துறை மாணவர்களுககு இவ்விடம் சிறப்பான இடமாக இருப்பாலும் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் வருகை ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை நோககி அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
==