பைக் மீது வேன் மோதல்: கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

செய்துங்கநல்லூர் அருகே மோட்டார் பைக் மீது வேன் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ் மகன் மணிகண்டன்(32). இவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள மூக்குப்பீறியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரும், வி.எம்.சத்திரத்தை சேர்ந்த மனோகரன் மகன் அவினேஷ் வரதன்(25) என்பவரும் உறவினர்கள். அவினேஷ் வரதன் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இருவரும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக திருச்செந்தூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பல்க் அருகே வந்தபோது எதிரே வந்த வேன் பல்க்கில் பெட்ரோல் போடுவதற்காக எந்தவித சைகையும் காட்டாமல் திடீரென்று திரும்பியது.

இதனால் வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவினேஷ் வரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்ட. விபத்து இதுகுறித்து செய்துங்க நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரான திருப்பாற்கடலை தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன.