ஆதிச்சநல்லூரில் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் வருகின்ற 15ம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. இந்த பணியை அமைச்சர் மா.பாண்டியராஜன் துவக்கி வைக்கிறார். இந்த நிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் இவ்விடத்தினை ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள வாகைக்குளம் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவ மாணவிகள் 25க்கும் மேற்பட்டோர் ஆதிச்சநல்லூருக்கு கள ஆய்வு செய்ய வருகை தந்தனர். அவர்கள் ஆதிச்சநல்லூரில் தற்போது அகழாய்வு செய்ய உள்ள பகுதி, 2005ல் அகழ்வாய்வு செய்த இடம் மற்றும் புளியங்குளம் முதுமக்கள் தாழிகள் தகவல் மையம் பகுதிகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். முன்னதாக மாணவ மாணவிகள் வல்லநாடு அருகே உள்ள உழக்குடிக்கு சென்றனர். அங்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி ஆராய்ச்சி மாணவர் ஆறுமுக மாசன சுடலை மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அதன்பின் 15 ந்தேதி ஆய்வு நடைபெற உள்ள சிவகளை பகுதிக்கு மாணவர்கள் சென்றனர். அங்கு ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் பள்ளி வரலாற்று துறை ஆசிரியர் மாணிக்கம் விளக்கம் அளித்தார். இந்த களப்பயணத்தில் கல்லூரியின் வரலாற்று துறை இளங்கலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, வரலாற்று துறை தலைவர் சண்முகலெட்சுமி, பேராசிரியர் பேச்சிமுத்து, பியூலா தேவி ஸ்டெல்லா, கம்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர் மாலையா கணேஷ், வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஸ்ரீநாத், இசக்கிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.