ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் பாலத்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்து பைக்கில் தப்பிச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் புதுப்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 2பவுன் தாலிச் செயினை பறித்து பைக்கில் தப்பிச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் பழைய பாலத்தில் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் உள்ளே வரும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் பழைய பாலத்தின் வழியாக திரும்பிச் செல்கின்றன.

இதனால், புதுப்பாலத்தில் அதிக அளவில் போக்குவரத்து இல்லாத நிலையே உள்ளது. மேலும், புதுப்பாலத்தில் அதிகாலையிலும் மாலை நேரத்திலும் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மற்ற நேரங்களில் புதுப்பாலத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத நிலை தான் உள்ளது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த பொன்பாண்டி என்பவரது மனைவி இசக்கிதாய்(வயது 40) புதுப்பாலம் வலியாக நடந்து வந்து கொண்டு இருக்கும் பொழுது, பின்னால் பைக்கில் வந்த 2மர்ம நபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி இசக்கிதாய் கழுத்தில் இருந்த 2பவுன் தாலிச் செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, இசக்கிதாய் அளித்த புகாரின்படி குற்றப்பிரிவு ஆய்வாளர் சொர்ணராணி வழக்கு பதிவு செய்து செயினை பறித்து தப்பி ஓடிய 2மர்மநபர்களையும் தேடி வருகின்றார்.