ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி மேற்கொள்ள உள்ள பகுதியில் ஜேசிபி மூலம் முதுமக்கள்தாழிகள் உடைந்த விவகாரம். ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். இங்கு இந்தியாவிலேயே முதல்முதலில் அகழாய்வு நடந்தது. மாநில அரசு ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக்கரையில் உள்ள பல இடங்களில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி 10 பேர் கொண்ட குழுவினர் தாமிரபரணி ஆற்றின் கரையில் 114 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆதிச்சநல்லூரில் 100க்கு 100 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்தனர். மேலும் ஓரிரு தினங்களில் இந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சுற்றி ஏற்கனவே கம்பி வேளிகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தின் பக்கவாட்டில் முள்வேளிகள் அமைப்பதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு ஜேசிபி இயந்திரம் கொண்டு தோண்டியுள்ளனர். அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளது. இதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய தொல்லியல்துறை அதிகாரி எத்திஸ்குமார் ஆதிச்சநல்லூரில் ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட குழியினை பார்வையிட்டார். மேலும் அந்த குழியில் உடைந்த முதுமக்கள் தாழிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில் நேற்று காலை ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் தற்போது ஆட்களை கொண்டு மூடப்பட்டது.

இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இந்த இடத்தில் குழி தோண்டியவர்கள் மீது செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சதீஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தனியார் ஒப்பந்ததாரர் திலக் பாலகிருஷ்ணன் மற்றும் சர்குணம் என்ற இரண்டு பேர் மீது செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் தொல்பொருள் மற்றும் பழங்கால பொருட்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் விதி படி 23, 39, 48 ஆகிய மூன்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.