ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் வீணாக செல்லும் தண்ணீர்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் வீணாக செல்லும் தண்ணீர் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதிகை மலையில் தொடர்ந்துபெய்து வரும் கன மழை காரணமாகவும், பாபநாசம் மேலணை தனதுகொள்ளவான 114 அடியை தொடும் காரணத்தினாலும் மிக அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கல்யாணதீர்த்தம் ,அகத்தியர் அருவி இரண்டையும் மூழ்கடித்து தண்ணீர் ஆற்றில் வெள்ளமாக பாய்கிறது.
பாவநாசம் தலையணை, நதியுண்ணி அணை, கன்னடியன்அணை, அரியநாயகிபுரம் அணை, பழவூர் அணை, சுத்தமல்லி அணை நெல்லை மாவட்டத்தில் நிறைந்து வடிகிறது. அதுபோல் தாமிரபரணியின் துணை நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மணிமுத்தாறு அணை, கடனா அணை, ராமாநதி அணை, நிரம்பி தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி தாமிரபரணியில் கலக்கிறது. சிற்றாறு நதியும் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்குடன் தாமிரபரணி நதியில் சிவலப்பேரியில் கலக்கிறது.
எனவே இந்த தண்ணீர் மிக அதிகமான தூத்துக்குடி மாவட்டம் எல்கைக்குள் நுழைகிறது. இதனால் தாமிரபரணியின் நீண்ட தடுப்பணையான மருதூர் அணை வரலாறு காணாத அளவுக்கு முழு கொள்ளவை தொட்டு, சுமார் 4000 அடி பரப்பளவில் தண்ணீர் நிரம்பி வழிகிறது . இந்த கண்கொள்ளா காட்சியை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.
இதற்கிடையில் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வினாடிக்கு 28ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. மருதூர் அணை கீழக்கால் வாய்காலில் இருந்து பாசன குளங்களுக்காக 300கனஅடி தண்ணீரும் மேலக்காலில் இருந்து 1200கனஅடி தண்ணீரும் சடையநேரி கால்வாயில் 500கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதைபோல், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் மற்றும் தென்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 28ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
மழைக்காலங்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கன அடித் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளம் வந்து கடலுக்கு தண்ணீர் செல்லும் போது, பொதுமக்களும் , விவசாயிகளும் வாடிக்கையாக குரல் கொடுப்பது வழக்கம் .அதன் பின் இதை அனைவரும் மறந்து விடுகிறோம். இதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது மிக முக்கியமான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையை தீர்க்க விவசாயிகள் அடங்கிய ஒரு குழுவை நியமனம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.