சாத்தான்குளம் பகுதியில் வரலாறு காணாத மழை குடியிருப்பை காலி செய்த பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம். மிகவும் வறட்சியான பகுதியாக கருதப்படும் இந்த ஊரை சுற்றி கடந்த 25 வருடங்களாக சரி வர மழை பெய்யவில்லை. இதற்கிடையில் இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி விட்டது. இதை சீர் செய்ய அரசு மணிமுத்தாறு அணையில் இருந்து 4 வது ரீச் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி செய்தது. அதுவும் போதுமானதாக இல்லை. தாமிரபரணி பாசனம் மருதூர் மேலக்காலில் இருந்து சடையநேரி கால்வாய் மூலமாக கிட்டத்தட்ட 25 கோடிரூபாய் செலவு செய்து சாத்தான்குளம் அருகில் உள்ள புத்தன் தருவை குளத்தினை நிரப்ப நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக சாத்தான்குளம் பஸ் நிலையம் நீரில் முழ்கியது. அதோடு மட்டுமல்லாமல் கருமேனி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நாசரேத் அருகில் உள்ள எழுவரைமுக்கி கிராமத்திற்கு உட்பட்ட அச்சம்பாடு கிராமத்திலும் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் இங்கு வாழ்ந்த சுமார் 175 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.
அச்சம்பாடுஅருகில் உள்ள தேரிப்பண்ணை உள்ள பரமார்த்த குளம் நிரம்பியது. இந்த குளத்தின் தண்ணீர் அச்சப்பாடு கிராமத்துக்குள் புகுந்தது. இந்த பகுதியில் விவாசாய தொழில் செய்பவர்களின் 25 வீடுகள் வெள்ளத்தில் சிக்கியது. எனவே இங்குள்ள மக்களை அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் உடமைகளை அப்படியே விட்டு விட்டு, பாய்களுடன் அரசு பள்ளிக்கு சென்ற காட்சி மனதை வருடுவதாக இருந்தது.
மேலும் பரமார்த்த குளம் உடையும் தருவாயும் உள்ளது. அப்படி உடைந்தால் இந்த பகுதியில் பெரும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.