செய்துங்கநல்லூர் அருகே தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி மேலும் 5 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆறறில் மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர் அய்யனார், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு ஆகியோர் ஒரு ஜீப்பில் முத்தாலங்குறிச்சி நோக்கி சென்றனர். அவர்களுக்கு முன்பாக தலையாரி பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
செய்துங்கநல்லூரில் இருந்து வசவப்பபுரம் செல்லும் மெயின் ரோட்டில் ஒரு செங்கல் சூளை அருகே சென்று கொண்டிருந்தபோது அடுத்தடுத்து 2 லாரிகளில் சிலர் மணல் கடத்தி வந்தனர். இதைக்கண்ட தலையாரி பாலகிருஷ்ணன் அந்த லாரிகளை கை காட்டி தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
ஆனால் அவர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். அப்போது லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. உடனே பாலகிருஷ்ணன் கீழே குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து லாரியில் இருந்தவர்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்த வாறு மணலை கடத்திச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்துங்கநல்லூரை சேர்ந்த பெருமாள் (வயது 28) முத்தாலங்குறிச்சி மாணிக்கராஜ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இது தவர மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.