தூத்துக்குடி மாவட்ட தேரிக்காடு 24 ஆயிரம் வருடம் பழமையானது

தூத்துக்குடி மாவட்ட தேரிக்காடு பகுதிகள் 24 ஆயிரம் வருடம் பழமையானது என்று வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ பீர்பால் சானியின் பழைய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் பா.மொர்தெகாய். இவர் வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை நிகழ்வை வைத்துக் காலத்தினை கணிக்கும் ஒரு வல்லுநர். இவர் ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வெளியே தெரிந்த கட்டிடங்களை ஆய்வு செய்ய வந்தார். இவர் அங்குள்ள இடங்களை பார்வையிட்டார். பின் செங்கல் கட்டிடங்கள் , கல் தூண்கள், அதில் வரையப்பட்ட சிறபங்கள், மேலும் நங்கூரம் போன்ற அமைப்புகள். நுழைவு வாயில் போன்றவற்றை பார்வையிட்டார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் ஏற்கனவே இந்த பகுதியில் பல ஆய்வுகள் நடத்தியுள்ளோம். முதல் ஆய்வில் தேரி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த போது 24 ஆயிரம் வருடம் பழமையானது என்பதை கண்டு கொண்டோம். அதன் பிறகு கொற்கை துறை முகம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
‘ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கொற்கை ஒரு துறைமுகமாக இருந்தது என்பது வரலாற்றுக் குறிப்பு களிலிருந்து ( மெகஸ்தனிஸ் கி.மு. 302 லும் எரித்ரியன் (கடல் வழிப் பயணம் ஆசிரியர்), கி.பி. 80 லிலும், தாலமி கி.பி 130 லிலும் கிடைக்கிறது. பின்னர் கி.பி. 1296 ல் மார்க்கோ போலோ பழைய காயலில் வந்து படகில் இறங்கியதாகவும், அங்கிருந்து மதுரை பாண்டிய மன்னனைக் காணச்சென்றதாகவும் குறிப் பிடப்படுகிறது. இக்குறிப்புகளின் அடிப்படையில் முதலாவது கொற்கையில் துறைமுகமிருந்ததாகவும், பின்னர் கடல் மட்டம் தாழ்ந்த காரணத்தினாலோ, அல்லது தரைமட்டம் உயர்ந்ததாலோ அத் துறைமுகம் கைவிடப்பட்டு பழைய காயலுக்கு இடம் பெயர்ந்ததாக கருத முடிகிறது. பின்னர் பழைய காயல் துறைமுகமும் கைவிடப்பட்டு தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். ஏனெனில் கோழிக்கோட்டிலிருந்து கடல் மார்க்கமாக தெற்கே வந்த போர்ச்சுக்கீசியர்கள் கி.பி 1532 இல் தூத்துக்குடியில் தான் இறங்குகிறார்கள்.
நாங்கள் கொற்கை ஆராய்ச்சிக்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. கொற்கை துறைமுகமும் பழைய காயல் துறைமுகமும் எப்போது ஏன் கைவிடப்பட்டன என்பது தான் அந்த நோக்கங்கள். ஆனால் இதை நாங்கள் அகழ்வாராய்ச்சியாக கொண்டு செல்ல விரும்ப வில்லை. மாறாக புவியாராய்ச்சியின் வழியாகவே கொண்டு செல்கிறோம். ஏனெனில் புவியாராய்ச்சியின் முடிவுகள் அகழ்வாராய்ச்சியின் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் என்று நம்பியே , நான் எனது ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்திருந்தார். முனைவர் நவாஸ் அலி (நில வடிவமைப்பியல் ) முனைவர் நிதேஷ்கான்டே ( கடல் நிலை தொடர்பு) முனைவர் ஜெயங்கொண்ட பெருமான் ( பழங்கால பூகம்ப நிலை) ஆகிய மூவர் தான் எனது ஆராயச்சிக் குழு உறுப்பினர்கள். நான் வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை நிகழ்வை வைத்துக் காலத்தினை கணிக்கும் ஒரு வல்லுநனர். முதல் இருவரும் என்னோடு பீர்பால் சானியின் பழைய அறிவியல் ( லக்னோ) நிறுவனதிலும், முனைவர் ஜெயங்கொண்ட பெருமாள், வாடியாவின் இமய புவியாராய்ச்சி (டேராடூன்) நிறுவனத்திலும் அறிவிய லாளர்களாக பணிபுரிகின்றனர்.
நாங்கள் கடலை விட்டு அதிக தூரத்திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற குளத்திலும், கொற்கை குளத்திலும் பழையகாயல் குளத்திலும் மாதிரிகளை ஒவ்வொரு இரு சென்டி மீட்டர் ஆழத்திலும் எடுத்து சென்றுள்ளோம். அம்மாதிரிகளில் இருந்து , காலக் கணிப்பை செய்த பின்பு, மகரந்த தூள்கள், நுண்ணுயிரிகள் (ஆழக்கடல், கடற்கரை, நன்னீர்குளம்) மற்றும் புவி வேதியல் தனிமங்கள் மூலக் கூறுகளைப் பிரித்து ஆராய்ந்து, அந்தத்த தகவல் களினடிப்படையில் கடல் மட்டம் ஒவ்வொரு காலக்கட்டத்தில் எந்த அளவு இருந்திருக்கும், அப்போது கடலின் ஆழம் எவ்வளவு இருந்திருக்கும், அந்த ஆழத்தில் படகுகள் வந்து செல்ல வாய்ப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்ற கணிப்புகளை செய்ய இயலும்.
இதன்அடிப்படையில் அந்தக் கால கட்டத்தில் துறைமுகம்செயல்பட்டிருக்குமா? கைவிடப் பட்டிருக்குமா? என்று தெரிந்து கொள்ள இயலும். மேலும், எதனால் இத் துறைமுகங்கள் கைவிடப்பட நேர்ந்தன என்றும் அறிந்து கொள்ள இயலும். இந்த வேளையில் தான் ஆத்தூர் பகுதியில் கட்டிடங்கள் தெரிகிறது என்பதை பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிந்து கொண்டோம். எனவே இன்று இதை ஆய்வு செய்ய வந்துள்ளோம். இங்குள்ள செங்கல்களை ஆய்வுக்கு எடுத்து செல்கிறோம். இதன் மூலம் இந்த கட்டிடங்களில் வயதை கண்டறியலாம். அப்போது கொற்கை துறைமுகத்திற்கு இதற்கும் உள்ள தொடர்பும், எங்களது கொற்றை ஆய்வுக்கு மிக உதவியாக இருக்கும் . இதைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகும் என்று பா.மொர்தெகாய் தெரிவித்தார்.
அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக உயிரியல் தொழில் நுட்ப துறை தலைவர் டாக்டர் சுகாகரன், சமூகஆர்வலர் நெடுஞ்செழியன், அருண்மொழி பாண்டியன், சமூக ஆர்வலர் மேலப்புதுக்குடி ஜெபராஜ் உள்பட பலர் வந்தனர்.