கருங்குளத்தில் உள்ள குளத்தினை தூர் வாரி, நடைபாதை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

கருங்குளத்தில் உள்ள குளத்தினை தூர் வாரி, நடைபாதை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க கடந்த 2017 ஜுன் மாதம் தூர் வாரும் பணிகள் பல நடந்தது. இதில் கருங்குளம் வகுளகிரி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளம் தூர் வாரும் பணியும் துவங்கியது. அப்போதைய சப் கலெக்டர் தீபக் ஜேக்கப் பணியை துவக்கி¬ வத்தார். இங்கு பக்தர்களும் வெளிமாவட்ட மாநில யாத்திரியர்களும் அதிகமாக வந்து செல்கிறார்கள். எனவே கருங்குளம் வகுளகிரி மலை அடிவாரத்தில் உள்ள இந்த தெப்பக்குளம் முழுவதுமாக தூர் வாரப்பட்டு,அமலை செடிகள் அகற்றப்பட்டு நாலுபக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டு, தெப்பக்குளத்தினை சுற்றி வர நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தெருவிளக்கும் அமைக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வசதியும் செய்து தரப்படும். மேம்படுத்தப்பட்ட இந்த பூங்காவை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும், மேலும் இங்கிருந்து அள்ளப்படும் கரம்பை மண் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. என்று அவர் கூறினார்.
ஆனால் துவக்கி வைக்கப்பட்ட அந்த பணி இரண்டு வருடங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. தூர் வாரப்படும் போது எப்படி இருந்ததோ அதுபோலவே தற்போதும் இந்த குளம் உள்ளது. செடிகள் அகற்றப்படவில்லை. நடைப்பயிற்சி பூங்கா அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்பு சுவரும் அமைக்கப் படவில்லை. இதனால் சாலை ஓரத்தில் எப்போது விபத்து நடைபெறும் என கேள்வி குறியுடன் இந்தகுளம் உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் நலக்குழு செயலாளர் உடையார் கூறும் போது , கடந்த 2017ல் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக இந்த குளம் அமைக்கப்படும் என்றார்கள். ஆனால் அதன் பிறகு கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி குளங்களை பராமரிக்க திட்டங்களை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். ஒரு ஊர் கை நூறு என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குளம் பராமரிக்கப்படுகிறது. அதுபோல இந்த குளத்தினையும் பராமரிக்க மாவட்ட ஆட்சி தலைவர் ஆணையிட வேண்டும் என்று அவர் கூறினார்.
கோயில் நகரமான கருங்குளத்தில் இந்த குளம் நடைபயிற்சி செய்ய ஏற்ற குளமாகவும் பாதுகாக்கப்பட்டபொழுது போக்கு அம்சம் கொண்ட இடமாகவும் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.