தொல்லியல் சின்னங்களைச் சுற்றி மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உத்தரவு.

தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜிபிஎஸ் கருவி உதவியுடன் பூமியின் அடிபரப்பில் தொல்லியல் பொருட்கள் உள்ளதா என கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, பரம்பு, ஆதிச்சநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழநி உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட கோரி வழக்குகள் தொடரப்பட்டன. சில பகுதிகளில் குடியிருப்புக்களும், விளை நிலங்களும் இருப்பதாக விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி பூமியின் அடிபரப்பில் தொல்லியல் பொருட்கள் உள்ளதா என ஏன் கண்டறிய கூடாது? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கும் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை, அறிவிக்கப்பட உள்ளவை, அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கக்கூடாது எனவும், தொல்லியல் துறை சார்பில் தகவல் பலகை வைக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.