தீராத்திகுளத்தில் பருத்தி பயிரை மேய்ந்த மரநாய் கூட்டம். விவசாயிகள் விரக்தி

சேரகுளம் அருகே தீராத்தி குளத்தில் பருத்தி பயிரை மரநாய் கூட்டம் மேய்ந்த காரணத்தினால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சேரகுளம் அருகே உள்ள கிராமம் தீராத்திகுளம். இந்த கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பாசனத்தில் பல்வேறு விவசாயங்கள் நடந்து வருகிறது. இதில் பால்பாண்டி என்பவர் சுமார் 1 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய தோட்டத்தில் சென்று பார்த்த போது பருத்தி, மற்றும் பூ, இளம் காய்களை வெட்டி துண்டு துண்டாக போட்டிருந்தது. இதைகண்டு அதிர்ந்த அவர் அருகில் பார்த்த போது அங்கு மரநாய் கூட்டம் வந்து சென்றதை அறிந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, முதலில் யாரோ நமது வயலில் வெட்டி நாசம் செய்து விட்டார்கள் என்றுதான் எண்ணினேன். ஆனால் மரநாய் அட்டூழியம்தான் என கால் தடம் மற்றும் அங்கேயே அந்த நாய்கள் கழித்து வைத்து சென்ற மலம் மூலமாக அடையலாம் கண்டு கொண்டேன். அருகில் உள்ள பனைமரங்களில் இந்த மர நாய் வசித்து, இரவு வேளைகளில் கூட்டமாக வந்து பருத்தி பயிரை நாசம் செய்து விட்டு சென்று விட்டது. இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இது குறித்து யாரிடம் புகார் செய்ய, எப்படி பயிரை பாதுகாக்க என்று தெரியவில்லை. வேறு ஏதாவது பயிரை விஷ வண்டுகள் தாக்கினால் மருந்து அடிக்கலாம். ஆடு மேயாமல் இருக்க வேலி போடலாம். ஆனால் மரநாய்களிடம் இருந்துபயிரை காப்பாற்ற என்ன செய்ய என்றே தெரியவில்லை. எனவே எனது வயலில் பயிரிட்ட பருத்தி காய் முழுவதும் நாசமாகி விட்டது. என்றுஅவர் கூறினார்.

இந்த பகுதி மிகவும் வறட்சியான பகுதி. வானம் பார்த்த பூமி. மணிமுத்தாறு பாசனம் மூலமாகத்தான் பாசனம் நடைபெறும். தற்போது கிணற்று தண்ணீர் மூலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந் நிலையில் எங்கிருந்தோ வந்த மரநாய் பிரச்சனையால் பருத்தி விவசாயம் முழுவதும் நாசமாகிவிட்டது. எனவே விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளர்.