செய்துங்கநல்லூரில் பைக் மாயம். திருட்டை கட்டுபடுத்த கண்காணிப்பு கமரா பொருத்த கோரிக்கை

செய்துங்கநல்லூர் சந்தையில் நிறுத்தப்பட்ட பைக்குகளை திருடர்கள் திருடிசெல்வதால் அதை கண்காணிக்க கமரா பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சந்தை ஒன்றுள்ளது. இந்த சந்தை புதன்கிழமை தோறும் இயங்குகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மீன், ஜவுளி, காய்கறி உள்பட பல பொருள்கள் இங்கு கிடைப்பதால் காலை 6 மணிமுதல் இரவு 6 மணி வரை மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்த சந்தையை மேம்படுத்தவேண்டும் என பல கோரிக்கை விடப்பட்டது. இதன் பயனாக சந்தை சமுதாய நலக்கூடம் இருந்த இடத்திலும் தற்போது விரிவு படுத்தப்பட்டது. எனவே சந்தையில் தற்போது கூட்டம் பெருத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் சந்தைக்கு வரும் பொதுமக்களின் பைக்கை திருட்டு செல்வது வழக்கமாக உள்ளது.

கடந்த புதன் கிழமை செய்துங்கநல்லூர் 1 வது வார்டை சேர்ந்த குமரகுருபரன் மகன் பரமசிவன்(49) என்பவர் பைக்கை சந்தை வெளியே நிறுத்தி விட்டு சந்தைக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்த போது பைக் பூட்டை உடைத்து கொள்ளையன் பைக்கை திருடிசென்றது தெரிய வந்தது. அவர் செய்துங்கநல்லூர் போலிசில் புகார் செய்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . இதற்கிடையில் மக்கள் அதிகமாக கூடும் இவ்விடத்தில் கண்காணிப்பு கமரா பொறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
குறிப்பாக சந்தை உள்பகுதி, சாலையில் உள்ள இரு பகுதி, மற்றும் செய்துங்கநல்லூரில் உள்ள முக்கிய தெருக்களிலும் கண்காணிப்பு கமரா பொருத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது குறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த பரமசிவன் கூறும்போது, எங்கள் ஊரில் தற்போது திருட்டு அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க தொண்டு நிறுவனங்கள் மூலமாக கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யவேண்டும். தற்போது சந்தை மேம்படுத்த அரசு பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கருதி சந்தையில் பல பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அதன் கண்காணிப்பை நேரடியாக காவல்நிலையத்தில் பார்க்கும் வசதியை செய்துதர வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து செய்துங்கநல்லூரில் நடைபெறும் திருட்டை இதன் மூலம்தான் தடுக்க முடியும் என பொதுமக்கள் நம்புகிறார்கள். எனவே காவல் துறையினர் இதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.