அரசர்குளத்துக்கு பஸ் இல்லாமல் மாணவிகள் வேதனை

கருங்குளம் அருகே உள்ள அரசர்குளத்துக்கு பஸ் இல்லாமல் மாணவிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கருங்குளம் அருகே அரசர்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் கல்வி பயில அருகில் உள்ள இராமனுஜம்புதூர், பாளையங்கோட்டை உள்பட பல பகுதிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் இவர்கள் பள்ளிக்கு செல்ல முறையான அரசு பஸ் வசதி கிடையாது. இவர்கள் பஸ் ஏற அரசர்குளம் விலக்கு என்ற இடத்துக்கு சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று தான் பஸ் ஏறி வருகிறார்கள்.

இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த செல்வக்குமார் கூறும்போது, எங்கள் ஊருக்கு காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகள் மட்டுமே அரசு பஸ் நெல்லையில் இருந்து அரசர்குளத்துக்கு வருகிறது. மற்ற வேளைகளில் கருங்குளத்தில் இருந்து பேய்குளத்துக்கு மினிபஸ் ஒருசில நேரங்களில் இயங்கி வருகிறது. ஆனால் இந்த பேருந்துகள் இராமனுஜம்புதூர் செல்லவில்லை. எங்கள் மாணவர்களில் பெரும்பாலனோர் இராமனுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகிறார்கள். எனவே மாணவர்கள் இராமனுஜம்புதூர் செல்ல 3 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியது உள்ளது. எனவே பள்ளிநேரத்தில் வரும் நெல்லை & இராமனுஜம்புதூர் பேருந்துகளை அரசர்குளம் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது அந்த இரு வேளையிலாவது அரசு பேருந்து கூடுதலாக இயக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் இராமனுஜம்புதூருக்கு தாதன்குளம், கிளாக்குளம், வல்லகுளம், அரசர்குளம் வழியாக புதிய பேருந்து இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.