2019 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு;தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை மே 23

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் விக்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கட்டம் வாக்குப்பதிவு தேதி தொகுதிகள் மாநிலங்கள்
1 ஏப்ரல் 11 91 20
2 ஏப்ரல் 18 97 13
3 ஏப்ரல் 23 115 14
4 ஏப்ரல் 29 71 9
5 மே 6 51 7
6 மே 12 59 7
7 மே 19 59 8

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 19

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை : மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச் 29

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெறும்.

ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது என்று சுனில் அரோரா தெரிவித்தார்.

வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறது. இம்முறை தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பல ஊகங்களுக்கு இன்று தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.