கருங்குளத்தில் விபத்துக்களை தடுக்க உடனடியாக பேரிகார்டு அமைக்க வேண்டும்

கருங்குளம் சத்திரத்தில் விபத்துக்களை தடுக்க உடனடியாக பேரிகார்டு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் மிகப்பெரிய நகரமாக உருவெடுதது வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரி, உதவி கல்வி அலுவலர் அலுவலகம், குழந்தைகள் ஊட்டசத்து அலுவலகம், வங்கி, போன்ற மிக முக்கிய அலுவலகங்கள் இங்கு உள்ளன. மிக பழமையான வழிபாட்டு தலங்களான மார்த்தாண்டேஸ்வர் சிவனாலயம், தென்திருப்பதி என போற்றப்படும் மலைமேல் வெங்கிடாசலபதி ஆலயமும் இங்குள்ளது. இந்த ஆலயங்களில் நடைபெறும் விழாக்களுக்கு 1000 கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். தற்போது கொங்கராயகுறிச்சியில் இருந்து கருங்குளத்துக்கு ஆற்று பாலம் அமைத்து விட்டார்கள். எனவே ஆற்றின் மறுகரையில் உள்ள மணக்கரை, ஆறாம்பண்ணை, நடுவக்குறிச்சி, அரபாத் நகர், திருச்செந்தூர் பட்டி, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம் , தோழம்பண்ணை உள்பட பல கிராமங்களில் இருந்து பயணிகள் கருங்குளம் சத்திரத்தில் தான் கூடுகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசல் இங்கு அதிகமாகி விட்டது. அதோடு மட்டுமல்லாமல் மூலைக்கரைப்பட்டியில் இருந்து சுமார் 42 கிராம மக்களின் போக்குவரத்தும் கருங்குளம் சத்திரத்துக்கு தான் வந்து சேருக்கிறது. நெல்லை & திருச்செந்தூர் மெயின்ரோட்டில் மிக அதிகமான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் இந்த இடத்தில் மெதுவாக செல்ல அறுவுருத்த எந்த அறிவிப்பு பலகை இல்லை. எனவே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் இவ்விடத்தில் பைக்கும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் கொங்கராயகுறிச்சியை சேர்ந்த பார்த்தீபன் என்ற வாலிபர் உயிரிழந்து விட்டார்.

இதுகுறிதது ஆறாம்பண்ணையை சேர்ந்த சேக் அப்துல் காதர் கூறும் போது, கருங்குளம் சத்திரம் மிக முக்கிய இடமாக மாறி விட்டது. இவ்விடத்தில் மிகப்பெரிய பஸ் நிலையம் அமைக்கவேண்டும். மற்றும் நெல்லை திருச்செந்தூர் மெயின்ரோட்டில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கான நடவடிக்கை அரசு மூலம் இதுவரை எடுக்கப்படவில்லை. அடுத்த நிதியாண்டில் இவ்விடத்தில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தருதாக கனிமொழி எம்.பி வாக்குறுதி கொடுத்து உள்ளார்கள். இதற்கிடையில் தற்காலிகமாக இவ்விடத்தில் விபத்தினை தடுக்க காவல் துறையினர் பேரிகார்டு அமைத்து இருபுறமும் வரும் வாகனத்தின் வேகத்தினை கட்டுபடுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

திருச்செந்தூர் நடைபயணம் செல்லும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு இவ்விடத்தில் தான் வந்து கூடுகிறார்கள். அந்த சமயத்திலும் விபத்து எதுவும் ஏற்பட்டால் பல உயிர்களை இழக்க நேரிடும். எனவே உடனடியாக காவல் துறையினர் இவ்விடத்தில் பேரிகார்டு வசதி செய்து வாகனங்களில் வேகத்தினை கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.