தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா போட்டி ? சரத்குமார் பதில்

வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுவாரா என்பதை கட்சியின் உயர்மட்டக்குழுதான் முடிவு செய்யும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல மகளிர் அணி ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தக் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மற்றும் அந்தக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் வந்தனர். தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சரத்குமார் கூறும் போது:
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் ராதிகா போட்டியிடுவது குறித்து உயர்மட்ட குழு முடிவு செய்யும். கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் நிற்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அனைவருக்கும் எங்கு வேண்டுமானாலும் நிற்கும் உரிமை உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்காததற்கு அமைச்சர் மா.பா பாண்டியராஜன் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்படி ஒரு கொள்கை முடிவு எடுத்தால் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் வருவதற்கு தயக்கம் காட்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் அதிக முதலீடு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அதை இடமாற்றம் செய்ய முடியுமா என்பது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் தமிழகஅரசு சுமூகமான முடிவு எடுக்க வேண்டும். அவர்களை அழைத்து பேச வேண்டும். அப்போதுதான் தீர்வு காண முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு சரத்குமார் கூறினார்.