2.முத்துகிளி தொடர் கதை – முத்தாலங்குறிச்சி காமராசு

2.முத்துகிளி
தொடர் கதை – முத்தாலங்குறிச்சி காமராசு

புஷ்பத்தை ரத்னம் கையில் ஒப்படைத்த முத்துகிளி
ரத்னம் அப்படியே அதிர்ந்து போனார்.
‘என்னது செத்து போன அக்கா பேசுறாளா; அவ செத்து 25 வருசம் ஆச்சே; அவ எப்படி போனுல பேசுவா’ ரத்னத்துக்கு தலை சுத்தியது.
அதற்குள் சொர்ணக்கிளி மச்சானுக்கு கஞ்சி கொடுத்து விட்டு திரும்பி வந்துவிட்டாள்.
‘என்னல தம்பி இப்படி பேயறஞ்ச மாறி நிக்க. என்ன ஆச்சி’.
மௌனமாக இருந்த, ரத்னத்தை உலுக்கினாள்.
‘ஏலே.. தம்பி.. என்னல… ஆச்சி’.
தன் நிலைமைக்கு வந்த அவர் கண்களில் இருந்து பொழு பொழுன்னு கண்ணீர் வடிந்தது.
‘அழாத… ல. என்ன ஏதுன்னு. சொல்லிட்டு அழு’.
தம்பியின் கண்ணை துடைத்தாள் சொர்ணக்கிளி
‘யக்கா. என மவ முத்துகிளிக்கு ஆபத்தாம்’.
‘யாருல.. சொன்னா’.
‘எங்கக்கா முத்துகிளி சொன்னா’.
‘அட பொசங்கெட்ட பயல.. அவ செத்து 25 வருசம் ஆச்சில. உங்கிட்ட வந்து சொன்னால. ஏம்ல.. தம்பி. மக காணாம போனதுல இருந்து பித்து பிடிச்சி போயிட்டா உனக்கு’
‘இல்லக்கா போனில பேசுனா’.
அழுத்தமாக சொன்னார்.
‘யாருல செத்து போன முத்துகிளியா’
மீண்டும் அதிர்ச்சியாக கேட்டாள் சொர்ணக்கிளி.
‘ஆமாக்கா’.
உண்மையிலேயே நெஞ்சை உலுக்கியது சொர்ணகிளிக்கு. முத்துகிளி இறந்து போன பிறகு கூட அவள் ஆவியா அலைந்து கொண்டிருந்தாள். பல சமயம் சொந்தகாரங்க உடலில் ஆவியா புகுந்து பல சேட்டை பண்ணினாள். இந்த சம்பவங்களை பல நேரங்களில் சொர்ணக்கிளி உணர்ந்து இருக்கிறாள். ஒரு சமயம் தன்னோட உடம்புல கூட புகுந்து, ‘எனக்கு மல்லிகை பூ வாங்கி வச்சி கும்பிடுன்னு’ மிரட்டின அந்த காலத்தை மறக்க முடியுமா?.
நிறைவேறாத ஆசையோட இறந்தவங்க ஆவியா அலைவாங்க. உண்மை தான். முத்துகிளி சாவும் அப்படிதானே.
ரத்னத்தை பார்த்தாள் சொர்ணக்கிளி.
‘இருக்கலாம்ல. உன் அக்கா முத்துகிளி சாதரணமவ கிடையாது. அவ குடும்பத்து மேலே நிறைய ஆசை வைச்சிருந்தா. ம். யாரு நினைச்சாவ. அவ திடீர்ன்னு செத்துபோவான்னு. நிறைவேறாத ஆசையோட செத்து போனவ. ஆவியா நின்னு பல பேரை உண்டு இல்லைன்னு பண்ணிக்கிட்டு இருக்கா. அதெல்லாம் சரி. ஆனா.. செல் போனுல முத்துகிளி ஆவி பேசுமா. அது தான் நம்ப முடியலை’.
‘பேசுனாக்கா அதுவும் மும்பையில இருந்து’
அப்பாவியாக பதிலளித்தார் ரத்னம்.
வானத்தை வெறித்து பார்த்தால் சொர்ணக்களி. இரண்டு நிமிடம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
‘ஏலே. எதுக்கும் பம்பாயில நம்ம சொத்தகார பயலுவ யாரும் இருந்தா கேட்டு பாருல. அங்க எங்கேயும் இவ போயிட்டலான்னு’
ரத்தனத்துக்கு மனசு படக்கு படக்குன்னு அடித்தது.
எங்கே இருந்து ஆரம்பிக்க. எப்படி ஆரம்பிக்க. ‘முத்துகிளி நீ. என்ன நிலைமையில இருக்க. உன்னை கடைகுட்டி பொன்னுன்னு ஆம்பிள்ளை பிள்ளைக்கு நிகரா வளர்த்தேன. உன் நிலைமை இப்படி ஆயிருச்சே’.
மனதுக்குள் பல எண்ண ஒட்டங்கள் ரத்னத்துக்குள் ஓடியது.
முத்துகிளி இறந்த அந்த நாள் நினைவுக்கு வந்தது.
முத்துகிளி வீடு ஓலை வீடுதான். முன்னே தலையை கவிழ்ந்து தான் போகனும். அந்த அளவுக்கு வாசல் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் காணப்பட்டது. உள்ளே போனால் அங்கே தாழ்வாரம் இருந்தது. சுற்றி நாலு புறமும் கூரை போட்டிருந்தார்கள். பெய்யும் மழை தண்ணீர் நடுவில் அங்கண குழியில விழுகிற மாதிரி வடிவமைத்து இருப்பார்கள். உள்ளே இரண்டு வீடு. அதுவும் ஒவ்வொரு அறை தான். ஒரு ரூம்பை குழந்தைகள் படுக்க பயன்படுத்திகொள்வார்கள். மற்றொரு ரூம்பில் பருத்தி மூடை நிறைய அடுக்கி வைத்திருப்பார்கள். சமையல் செஞ்சா தீ பிடிச்சிற கூடாதுன்னு வீட்டுக்கு வெளியே தான் விறகு பொருக்கி போட்டு அடுப்பு பற்ற வைப்பார்கள்.
‘தீ ரொம்ப மோசம்ல. ஆடி மாத காத்துல பருத்திகாட்டுல தீ பிடிச்சா அணைக்கவே முடியால்லா. சும்மா சுத்துசுத்துன்னு சுத்தி பக்கத்து தோட்டுத்துக்குள்ள புகுந்திரும்லா. வெறுவாக்கட்ட நெருப்பு. கவனமா இருக்கணும்ல. வீட்டுல பருத்தி மூட்டை மூட்டையா அடுக்கி வைச்சிருக்கோம். விலை வேற இல்லை. பஞ்சை வச்சிகிட்டு நெருப்பை பத்த வைச்சா; சின்ன தீ பொறி பறந்தாலும் பருத்தி பத்திகிடும். அப்புறம். அந்த தெருவில இருக்கிற எல்லா வீடும் எறிஞ்சி சாம்பலா போயிடும். சும்மா வெளையாட்டு காரியமில்லே. அப்புறம் பக்கத்து வீட்டுகாரங்க பயலுவ நம்மல கொளுத்திபுடுவானுவ’.
மகன் கிட்டே அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்.
வீட்டுக்குள்ளேயும். அரிக்கன் லைட்தான். திரி போட்டு, கண்ணாடிக்குள்ள அடைச்சி வைச்சிருப்பாங்க.
முத்துகிளிகிட்டே சொல்லுவாரு கிருஷ்ணநாடார், ‘சரி. எதுக்கும் அரிக்கன் லைட் இருக்கட்டும். 7 மணிக்கு அணைச்சிபுடனும். வீட்டில பருத்தி வச்சிருக்கோம். காத்து அடிச்சி பருத்தி எரிஞ்சிட கூடாது பாரு’ என்பார்.
இரண்டு கட்டை பேட்டரி லைட் வைத்திருப்பார். யாரோ சிலோனுல இருந்து வாங்கி கொடுத்திருந்தார்களாம். சிவப்பு எவரெடி பேட்டரி இரண்டு போட்டு வைத்திருப்பார். பேட்டரி தீய்ந்து போய் விடக்கூடாது என்று பகலுல புறாம் கழற்றி வைத்திருப்பார்.
ஏதாவது பூச்சி பட்டை வந்தா காவலுக்கு இந்த பேட்டரி லைட்டுதான். அதுக்கு மட்டும் ராத்திரி புறாவும் பேட்டரியை மாட்டி டார்ச்சு லைட்டை தலைமாட்டிலே வைத்திருப்பார்.
ராத்திரி பூறாவும் வயல்காட்டுல தண்ணீரை முறை வச்சி பார்ப்பாங்க. அதுக்காக தகப்பனும் மகனும் மாற்றி மாற்றி வயலுல தான் காத்து கிடப்பாங்க.
முத்துகிளிக்கு இந்த விவசாயம் பிடிக்கவே இல்லை. ஆரம்பத்தில இருந்தே எதிர்ப்புதான். பனைஏற்று வேண்டாம். விவசாயம் போதும் என்று அனுப்பி வைத்தார். விவசாய தொழில் செய்யவும் பிடிக்கவில்லை.
‘நம்ம சகதியில இருங்கினாத்தான். மத்தவங்க சோத்துல கையை வைக்கமுடியும். ரொம்ப புண்ணியமான தொழில் நம்ம தொழில்’ கிருஷ்ணநாடார் பெருமையா சொல்லுவார்.
‘ஆமாம் பனை தொழிலையும் இப்படித்தான் சொன்னாங்க. அப்புறமா பொண்ணே கட்டிகொடுக்கமாட்டேன்னு எல்லோரும் போர் கொடியை தூக்கிட்டு அழைஞ்ச பொறவு பனையேற ஆள் கொறைஞ்சு போச்சு. இப்போ விவசாயம்.
இது எங்க போய் முடிய போவுதோ’
அழுத்துக் கொண்டாள் முத்துகிளி. ஆனால் பீடி தொழில் ரொம்ப பிடிச்சிருந்தது.
இதனால் பீடி சுத்திக்கிட்டு இருப்பாள்.
அந்த காலத்தில் பீடி சுத்தும் கலை இந்தப் பகுதிக்கு வந்ததே சிறப்பு தான். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள, முக்கூடல் சொக்கலால் என்பவர் தான் மாரட்டி மாநிலத்தில் இருந்து இந்த தொழிலை நெல்லை மாவட்டத்துக்கு கொண்டு வந்தார்.
தனக்கு தொழில் சொல்லிக்கொடுத்த ராம்சேட் பெயரை தன்னோடு சேர்த்து சொக்கலால் ராம்சேட் எனப் பெயர் வைத்தார்.
அவர் காலத்துக்கு பிறகு தான் இந்த பகுதியில பீடி கம்பேனி பிரபலமாச்சு. பாலன் பீடி, செய்யது பீடி, பூ மார்க் பீடின்னு நிறைய பீடி கம்பேனி இங்கே செயல்பட்டது.
செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி, மேலப்பாளையம், கருங்குளம் பகுதியில பீடி கம்பேனி துவங்கினாங்க. ஆயிரக்கணக்கான பெண்கள் இவர்களிடம் பீடி சுற்றினார்கள்.
அவங்க ஏஜென்ட் வாரத்துக்கு ஒரு முறை கிராமங்களுக்கு வந்து பீடி எடுக்க வருவாங்க. அதனால இந்த தொழில் மிக பிரபலமாக நடந்தது.
வாலிப வயது காலத்தினை நோக்கி சென்ற ரத்னத்தின் கனவை சொர்ணக்கிளி சத்தம் நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது.
‘காடு மேடு அலைஞ்சி பனை ஏறி, பதணி காய்ச்சி வெயிலில காய்ச்சிட்டு கிடக்கிறதுக்கு, நம்ம பிள்ளையாட்டும் வீட்டில இருந்து பீடி சுத்தட்டுமேன்னு தங்க பிள்ளையலுவ முதலில பீடி சுத்த வச்சாவ.. அப்படி அவளை பீடி சுத்த வைக்காம்ம. தும்முதா.. துறத்துதா. அவளுக்கு கேன்சர் நோய் வந்திரும்ன்னு படிக்க வைச்சி, அவள ரயிலில ஏறி; பஸ்ஸில ஏறி பள்ளிகூடம் போக வைச்சது முத தப்பு. படிப்பும் சரியா வரலைன்னு சென்னைக்கு உம் மவ முத்துகிளியை துணி கடைக்கு வேலைக்கு அனுப்புனது இரண்டாவது தப்புல்ல. அப்புறம் புள்ளே எங்கிட்ட பேசிகிட்டே இருக்கணும்னு. சோப்பு டப்பா மாரி ஒரு செல்லு போனு வாங்கி கொடுத்தியே அது மூணாவது தப்பு. கடைசியில செல்போனுல நம்மகிட்டதான் பேசுதா பேசுதான்னு நீ.. நினைச்சி கிட்டு இருந்தீயே.. அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?. இப்போ பாத்தியா எவங்கிட்ட பேசினாலோ.. எவங்கூட ஓடிப்போனாலோ தெரியலையே..’
சொர்ணகிளி பேசுறது. ரத்னம் பொடறியில யாரோ அடிக்கிற மாதிரி இருந்தது. ‘என் பிள்ளை ஓடிப்போயிட்டாளா?. முத்துகிளியா?’
அந்த காலங்களை மீண்டும் நினைத்து பார்க்கிறார்.
முத்துகிளி வசித்த தெருவில் 10க்கு மேற்பட்ட பெண்கள் பீடி சுத்துவாங்க.
எல்லோரும் வீட்டு திண்ணையில தான் உட்காந்து இருப்பாங்க.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில எல்லா கிராமத்துக்கும் தெருவில டியூப் லைட் போட்டு இருந்தாங்க. அதனால கிராமமே வெளிச்சமாக இருந்தது. ஆனால் பல வீட்டுக்குத்தான் மின்சார இணைப்பு கொடுக்கவில்லை.
தெருவில இருக்கிற டியூப் லைட் வெளிசத்துல தான் எல்லோரும் பேசிக்கிட்டு இருப்பாங்க.
ஊரு கதை உலக கதையெல்லாம் அங்கே பேசுவார்கள். வாலிப வயசுல இருக்கிற ரத்னமும் அங்கேதான் இருப்பான். (வயதுக்கு தக்க அவரை அழைப்பதில் தவறில்லையே)
அந்த காலத்தில் சுலோன் ரேடியோவில அப்துல் ஹமீது நிகழ்ச்சி ரொம்ப பேமஸ். ஒருவர் சினிமா பாட்டு பாட, அவர் விட்ட இடத்தில் இருந்து மற்றவர் பாடவேண்டும். ரஜினிகாந்த படத்தில வருகின்ற ‘தோட்டத்தில பாத்திகெட்டு’ என்ற பாடலை போல விளையாட்டு பாட்டு பாடுவாங்க.
பீடி சுத்திறவங்க எல்லாம் ஒவ்வொருவரா பாட பாட ரத்னம் இடையில் அவர்களுக்கு புது பாட்டை எடுத்து கொடுப்பான்.
இந்த விளையாட்டுதான் எல்லோருக்கும் பிடிக்கும்.
இந்த இடத்தில்தான் ரத்னம் அத்தை மகள் புஷ்பம் இருந்தாள்.
சுருண்ட முடி. புது நிறம். கட்டையும் இல்லை நெட்டையும் இல்லை. நடுத்தரத்தில் அந்த பெண் இருந்தா. சிரித்தாள் வெளியே கேட்காது. அந்த அளவுக்கு அடக்கம். எப்போதுமே இரட்டை பாவடை கட்டி தாவணி கட்டியிருப்பாள். ஒரு பக்கம் அவங்க தோட்டத்தில விளையிற கிரேந்திபூவை வலதுபுறம் காதோரம் வச்சியிருப்பாள். ரெட்டை சடை. எப்பவுமே முகம் வாடாமலேயே இருக்கும்.
ரத்னத்துக்கு புஷ்பத்தை ரொம்ப பிடித்து போய்விட்டது.
ஆனால் எப்படி வெளியே சொல்ல. கிராமத்தில பெண்கள் அதிகமாக இருக்கிற கூட்டத்திலே ஆம்பிள்ளை பையனை உட்கார வைக்கிறதே. அபூர்வம். அதுவும் நான் இவளை காதலிக்கிறேன்னு சொன்னா அவ்வளவு தான். ரத்னத்துக்குன்னு ஒரு மதிப்பு இருக்கே. அந்த மதிப்பு என்ன ஆகும்.
அக்கா கிட்டேயும் சொல்ல முடியாது. அக்கா. சும்மாவே இந்த ஊரை கேலியும் கிண்டலும் பண்ணிகிட்டு இருக்கா. ஒருவேளை இந்த ஊருல நமக்கு பெண்ணான்னு சொல்லிவிடக்கூடாது.
ஆனாலும் ரத்னம், புஷ்பத்தை எப்படியும் கல்யாணம் பண்ணனும்னு முடிவு செஞ்சான்.
அந்த காலத்தில் பொழுதுபோக்கு எதுவும் கிடையாது. தீபாவளி பொங்கலுனா சினிமாவுக்கு கூட்டிட்டு போவாங்க; வாலிப பிள்ளைங்களுக்கு பாதுகாப்பா முன்னேயும் பின்னேயும் பெரியவங்க தான் வருவாங்க. ஊருல எங்கேயாவுது பாக்கூத்து, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தா கூட்டிட்டு போவாங்க. கோயில் கொடை பாக்க ஆடிக்கு ஒருக்க அமாவாசைக்கு கூட்டிட்டு போவங்க. இல்லாட்டி முத்தாலங்குறிச்சி காமராசு அண்ணாச்சி நாடகம் போட்டா அதை பார்க்க கூட்டிட்டு போவாங்க. அந்த சமயத்தில புஷ்பம் உட்காந்திருக்கிற இடத்துக்கு முன்புறம் ஏதாவது இடத்தில தூரத்தில இருந்து பார்த்து கொள்ளலாம். இருட்டில நாடகத்தை பார்த்து புஷ்பம் முகம் சிரிக்கிறதை பார்கணுமே, அப்படியே ரத்னம் கிறங்கி போவான். ஆனால் அவள் கிட்டே பேசத்தான் முடியாது.
தப்பி தவறி பேசனும்ன்னு நினைச்சி கிட்ட போனாலும், எங்கிருந்தோ வர்ற பாட்டி, ‘என்னை பாலையா மவனே முழிகிற முழி சரியில்லையே’. என்று வந்து நந்தி மாதிரி நிற்பாங்க.
ரத்னம், புஷ்பத்தை கல்யாணம் முடிக்க எவ்வளவோ கஷ்டம். இப்போ மாதிரி போன் வாட்ஸ் அப்பில, ‘ஹலோ ஐ லைவ் யூ’ என்று செய்தி அனுப்பி மறு நிமிடம் ‘ஓ.கே’ ன்னு பதில் கேட்கிற காலம் அந்த காலம் இல்லை.
ஆனால் அதையெல்லாம் ஒரு நொடியில தூக்கி எறிஞ்சி இவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைச்சது முத்துகிளிதான்.
‘ஏலே தம்பி. புஷ்பம் நல்லா பீடி சுத்துவா. 1 நாளைக்கு ஆயிரம் பீடி சளைக்காம சுத்துவால. நம்ம அப்பா அம்மாவை நல்லபாத்துகிடுவா. நல்ல பொன்னு’ன்னு ஒரு நாள் முத்துகிளி சொன்னவுடனே. பக்குன்னு பிடிச்சிகிட்டான் ரத்னம்.
‘அக்கா. எனக்கு புஷ்பத்தை கட்டி தருவாங்காளா?’
முத்துகிளி மேலும் கீழும் பார்த்தாள்.
‘ஏலே.. உனக்கு அவ மேலே அவ்வளவு ஆசையா?’.
ரத்னம் அமைதியாக இருந்தான்.
‘சரி. மௌனம் சம்மத்துக்கு அறிகுறிடே.. அவ அம்மா கிட்ட கேட்கிறேன்.
சரின்னு சொல்லிட்டா கார்த்திகை மாசம் கல்யாணத்தை முடிச்சிருவோம்.’
சொல்லி முடித்தவள் புஷ்பம் அம்மாளிடம் கேட்டும் விட்டாள்.
அவர்கள் சம்மதத்துடன் இரண்டு பேர் கல்யாணத்துக்கு ரொம்ப உதவியா இருந்தாள்.
‘ஏலே ரத்னம் எங் கல்யாணம் தான் ராத்திரியோட ராத்திரி இருட்டுல தாலி கட்டி பொழுபொழு விடியதுக்குள்ள இங்க கூட்டிட்டு வந்துட்டாவ. உங் கல்யாணத்தை நல்லா முடிக்கணும்ல.
முதல் நாள் ராத்திரி முகூர்த்த கால் நட்டனும், முகூர்த்த அரிசி அளக்கனும், மறுநாள் காலையில மாப்பிள்ளை அழைப்பு, எதிர்மாலை சந்தனம் கொடுத்து, மாப்பிள்ளைக்கு ஜெயின் போட்டு கருங்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் கல்யாணம்ன்னு முறைப்படி செய்யணும்ல’ என்றாள்.
முத்துகிளியோட கனவு நிறைவேறியது.
அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுகிட்டு செய்தாள். எல்லோரும் ஜவுளி எடுக்க பேய்குளத்துக்கு போவாங்க. அப்போ அந்த பஜார் ரொம்ப பெரிதாக இல்லை. அந்த சமயத்திலே இவள் திருநெல்வேலி டவுணுக்கு பஸ் ஏறி போய் ஜவுளி வாங்கிட்டு வந்தாள். கல்யாணத்தை அந்த ஊருல யாருமே நடத்தாத மாதிரி முடித்து வைத்தாள்.
முத்துகிளியோட கைராசி, ரத்னத்துக்கு வரிசையா மூணு பெண் குழந்தை பொறந்தாச்சு.
முத்துகிளி தம்பியை பார்த்து சொன்னாள். ‘கவலை படாதே.. மூணாவது பெண் பிறந்தா முத்தமெல்லாம் பொன்னுன்னு சொல்லுவாவ. அவ போற இடத்தில செல்வத்தோட புரளுவான்னு பேசுவாவ. அதனால கவலை படாதலே தம்பி. எதுக்கும் நாலாவதா உனக்கு ஆம்பிள்ளை பிள்ளை பிறக்கும் ‘என்றாள்.
ரத்னமும் அக்காள் மேலே உள்ள பாசத்தில பச்சைகிளி, தங்ககிளி, ராசகிளி குழந்தைகளுக்கும் பெயரிட்டான்.
குடும்பத்து மேலே அவளுக்கு கொள்ளை ஆசை. எப்போதும் புஷ்பமும், முத்துகிளியும் தான் ஒன்னா இருந்து பீடி சுத்துவாங்க. குளத்துக்கு குளிக்க போவார்கள். கோடைகாலத்தில் எந்த இடத்தில் மோட்டார் ஓடுகிறது என்று பார்த்து அங்கே குளிக்க செல்வார்கள். ஆனா விதி வேறே மாதிரி வேலை செய்து விட்டது.
ஒருநாள்.
புஷ்பம் பீடி சுத்த தெருவுக்கு வரவில்லை. அதனால் முத்துகிளி வீட்டுக்குள்ளே உட்கார்ந்து பீடி சுற்ற ஆரம்பித்து விட்டாள்.
வீட்டுக்குள் மின்சாரம் எடுக்கவில்லை. பீடி தட்டுல ஒரு பாட்டலில் திரியை போட்டு மண்ணென்ணை விளக்கு போட்டு வச்சிருந்தாள்.
அதை மடியில் உள்ள பீடி தட்டுக்குள் வச்சிருந்தாள்.
ஏற்கனவே வீடு கூரை வீடு. முத்துக்கிளி மகள் பக்கத்தில படுத்து விளையாடிக்கொண்டிருந்தாள். எதிர்பாரத விதமாக அவளோட கை பீடி தட்டை தட்டி விட்டாள்.
இதனால் மண்ணெண்யை விளக்கு பறந்தது.
தீ.. பொறி முத்துகிளி தலைமேலே விழ.
சேலை, தலை முடியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
முத்துகிளி, தன் மீது பற்றிய தீ மற்றவர்கள் மீது பரவி விடக்கூடாது என்று நினைத்தாள். தன் மகளை காப்பாத்தவும், அவளை தள்ளிவிட்டு விட்டு, வீட்டை காப்பாத்தவும், உள்ளே இருக்கிற பருத்தியை காப்பாற்றவும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாள். ஆனால் முத்துகிளி மீது தீ அதிகமாக பற்றியது.
ஆடி மாத காத்து சுழற்றி வீச.. தீ அவள் மீது வேகமாக பரவியது.
தெருவில் பீடி சுற்றி கொண்டிருந்தவர்கள். தீடீரென்று தீ பந்தம் போல ஒரு உருவம் வந்தவுடன் ஏதோ கொள்ளி வாய் பிசாசு என்று பயந்து போய் வீட்டுக்குள் சென்று கதவை சாற்றினர்.
முத்துகிளிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கதறினாள். அந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அவளுக்கு உதவி செய்ய யாருமே இல்லை.
எதுவும் அறியாத பெண் குழந்தை மட்டும் அழுது கொண்டே வாசலுக்கு ஓடி வர. தன்னை குழந்தை தொட்டால் அதுவும் தீயில் சிக்கி கொள்ளும் என பயந்து தெருவில் கிழக்கு நோக்கி ஓடினாள்.
10 நிமிட போராட்டம்.
முத்துகிளியின் உடல் முழுவதும் எரிந்தது.
கரிகட்டையாக தெருவில் பொத்தென்று விழுந்தாள்.
(தொடரும்)