நட்டாத்தி நயினார் குலசேகரன் நினைவுடன் முதலமாண்டு நினைவேந்தல்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம் நட்டாத்தி கிராமத்தில் பிறந்தவர் நயினார் குலசேகரன். தென்குழந்தாபதி என்று வரலாற்று பெயர் பெற்றது இந்த நட்டாத்தி கிராமம். இந்த கிராமத்தில் நட்டாத்தி ஜமீன்தார் குடும்பம் மிகவும் விசேசமானது. அந்த புகழ் மிக்க வழியில் வந்தவர் திருவழுதி வைகுந்த நாடார். இவரது ஒரே சகோதரி பெரிய பொன்னம்மாள். இந்த பெரிய பொன்னம்மாளுக்கும் இதே ஊரை சேர்ந்த பெரிய மாப்பிள்ளை குலசேகர நாடாருக்கும் அந்த காலத்தில் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நல்லதொரு வாழ்க்கையும், ஈகை குணமும் கொண்ட இந்த தம்பதிகளுக்கு 8 குழந்தைகள் பிறந்தது. அதில் மூத்த மகன்தான் நயினார் குலசேகரன்.

நயினார் குலசேகரனின் தாத்தா பெரிய மாப்பிள்ளை நாடார் தெய்வ அருள் பெற்றவர். இவர் தெய்வத்துடன் நேரடியாகப் பேசும் ஆற்றல் படைத்தவர் என்று பக்தர்களால் பாராட்டு பெற்றவர். அதற்கு அவரது ஆன்மீக பலம் பக்கபலமாக இருந்தது. நயினார் குலசேகரின் பெரிய தகப்பனார் துரைச்சாமி குலசேகரன் சிறந்த சிந்தனையாளர். சுவாமி விவேகானந்தரின் சீடர். இவரும் சுய நலமற்றவர் என்று ஊர் மக்களால் பாராட்டப்பெற்றவர்.

தனது பெரிய தகப்பனாரை குருவாக மதித்து வந்தவர். சிறுவயது முதலே இவரை உண்ணிப்பாக கவனித்து வந்தார். அவரது தேசப்பக்தி, பொது அறிவு, பொது சேவை, அஞ்சாமை, வாதிடும் திறமை இவைகளைத் தனது சிறு வயதிலேயே கற்று செயல்பட்டு வந்தார். நயினார் குலசேகரனின் தகப்பனார் சின்னசாமி குலசேகரன் குடும்ப பாசம் மிகுந்தவர். விவசாயியாகவே உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்றியர். இவரது தாயார் செல்வம் அம்மாள் பிள்ளைப்பாசம் மிகுந்தவர். பிள்ளைகளுக்காக அனைத்து தியாகத்தையும் செய்தவர்.
நயினார் குலசேகரன் தனது 23 வயதில் செல்லக்கனி என்ற ஆசிரியையை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 10வது மாதத்தில் செல்லக்கனி காலமானதால், ஐந்து வருடங்கள் கழித்து தனது தாயார் விருப்பப்படி தனது மாமன் மகள் வெள்ளையம்மாளை இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டார்.

நயினார் குலசேகரன் பொதுவுடமைவாதியாக இருந்த காரணத்தால் கம்யூனிஸ்டு கட்சியின் சிந்தனையாளரான இருந்தார். ஆகவே இவரது திருமணத்தினை பேராசிரியர் என்.வாணுமாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நயினார் குலசேகரனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் மூலம் 10 பேரன், பேத்திமார்கள் உள்ளனர்.
காலம் தான் உருண்டையானதே. பணம் வரும்.. ஆனால் எப்போது போகும் என்று சொல்ல முடியாது. அது போலவே தான் இவர் குடும்பத்தில் ஒரு புகம்பம் ஏற்பட்டது. புகழோடும், செழிப்போடும் வாழ்ந்து இவரது முன்னோர்கள் பல்வேறு சூழல் காரணமாக வறுமையில் சிக்கி தவித்தனர். இந்த வறுமை இவரது இளமைக்காலத்தில் ஏற்பட்டது தான் இவரது துரதிஷ்டம். அந்தக்காலத்தில் வசதிபடைத்தவர்கள் மட்டுமே பள்ளியில் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது மட்டுமல்லாமல் தனது சிறுவயது முதலே பொது சேவையும், விடுதலை வேட்கையும் அவர் முன் நின்ற காரணத்தினாலும், நயினார் குலசேகரின் பள்ளிப்படிப்பு 7வது வகுப்புடன் நின்றது. ஆனாலும் அந்த வயதிலேயே பொது அறிவு நிறைந்தவராகவும், வாதிடும் திறமையுள்ளவராகவும் காணப்பட்டதால், பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

சிறு வயது முதல் பத்திரிக்கைத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர். ஆங்கில பத்திரிக்கைகளான இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமலர் ஆகிய பத்திரிகைகளுக்கு ஏஜெண்டாகவும், தினமலர் பத்திரிக்கை நிருபராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் சாயர்புரம் பகுதியில் சுமார் 200 சந்தாதார்களை சேர்த்து நடமாடும் வாசக சாலை ஒன்றை ஏற்படுத்தினார். இந்த வாசக சாலையை பல ஆண்டுகள் இவர் நடத்தினார். 1955, 1960ல் சமதர்மம் என்ற மாத கையெழுத்து பத்திரிக்கையைத் தனது நண்பர்கள் டாஸ், அகத்சஸ், ரெமி ஆகியோருடன் நடத்தினார்.

காலங்கள் கடந்தது. இவர் வாழ்கையில் மேலும் ஒரு தாக்கம் ஏற்பட்டது. இதில் இவரது இரண்டாவது மனைவியும் காலம் சென்றார். அதன் பின் மனமுடைந்து நின்று விடாமல் தனது பணியை மேலும் தீவிர படுத்தினார். அதன்படி கோயமுத்தூர் தினமலர் அலுவலகத்தில், அலுவலக பொறுப்பாளராகவும், சிறப்பு நிருபராகவும் சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது தலைமையின் கீழ் கோயமுத்தூர் தினமலர் அலுவலகத்தில் சுமார் 11 பட்டதாரிகள் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயினார் குலசேகனுக்கு மேலும் ஒரு பிராப்தம் என்னவென்றால் அவரது சகோதரன். அவரின் தம்பி குலசேகரன் இவருடைய எல்லாக் கருத்துக்களிலும், கொள்கையினிலும் துளி கூட வேறுபடவில்லை. சிறு வயது முதலே, இவருடன் இவர் தம்பி குலசேகரனும் சேர்ந்தே இருந்தார். காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு கொடிபிடித்தது முதல் இருவருடைய பார்வையும் இவருடைய தம்பி பார்வையும் ஒரே நேர்கோட்டில்தான் இருந்தது.

சுதந்திரப்போராட்டம் இவர் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தது. “என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம்”என்று, சுதந்திரப் போராட்ட காலத்தில் மெகாப்போன் வைத்து பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் ஊர், ஊராகப் சென்று பேசினார். இதனால் கிராம மக்களிடம் சுதந்திரத்தாகத்தை ஊட்டினார். சிறு வயதிலேயே கதர் ஆடை அணிந்து சுதேசிப் பிரச்சாரம் செய்தார். மதுபானம், அன்னிய வாஸ்துகளை ஒதுக்கித் தள்ளியதோடு மட்டுல்லாமல் மது அருந்துவதை எதிர்த்தும் பிரச்சாரமும் செய்தார்.

மகாத்மா காந்தி மீது மிகப்பெரிய பற்று வைத்தவர். இவர் காந்தியின் மறைவை தாங்க முடியாமல் தவித்தார். இவர் மகாத்மாகாந்தி இறந்த செய்தியை சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் “மெகாபோன்” மூலம் பேசி அறிவிப்பு செய்தார். 1947 ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரப்போராட்ட தியாகி மங்களா பொன்னம்பலம் போன்ற தியாகிகளுடன் இணைந்து விவசாயப் போராட்டங்களை நடத்தினார். இதில் நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார். சேர்மாதேவியில் 144 தடையுத்தரவை மீறி போராட்டம் நடத்தினார். அதனால் காவலரிடம் மாட்டி கொண்டார். அவர்களிடம் அடி உதைபட்டார். அதோடு மட்டுமல்லாமல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்காக அம்பாசமுத்திரம் சப்&ஜெயிலில் 30 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். மேலும் அதே காலங்களில் தலித் விவசாய கிராமங்களான பெருங்குளம் விவசாயிகள் போராட்டம், மாங்கொட்டாபுரம் விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றை பெருங்குளம் தியாகி பி.எஸ்.பால்பாண்டியன் மாங்கொட்டாபுரம் தலித் மாவீரன் மாடசாமி ஆகியோருடன் இணைந்து நடத்தினார்.

நயினார் குலசேகரனுக்கு சிறை வாசத்தின் போது ஒரு துயரமான சம்பவம் நடந்தது. இவரது தந்தை சின்னச்சாமி குலசேகரன் நோய்வாய்ப்பட்டார். மகனை பார்க்க துடித்தார். ஆனால் வறுமையால் வாடிய குடும்பத்தால் சிறை காவலில் இருக்கும் மகனை பார்க்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் வருந்தி போன தந்தை கடைசியாக இறந்தார். இந்த நேரத்தில் மனம் உடைந்து போன செல்வம் அம்மாள் ஒரு முடிவுக்கு வந்தார். இனியும் சிறையில் மகனை விட்டு வைப்பது நல்லதல்ல. தன் கணவர் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் மகனை ஜெயிலை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் வாலிப பருவத்திலிருந்த தனது மூத்த மகள் காதில் அணிந்திருந்த கம்மலைக் கழற்றி ஈடு வைத்தார். அதன் பின் மிகவும் கஷ்டப்பட்டு சிறையிலிருந்த தன் மகனை ஜாமீனில் எடுத்து வந்தார்கள்.

வெளியே வந்தவர் மிகவும் வருத்தமடைந்தார். தனது தந்தையை நினைத்து கண்ணீர் சிந்தினார். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற கடும் முயற்சி எடுத்த தாயை வணங்கினார். தனக்காக தனது தங்கபொருளை ஈடு கொடுத்த சகோதரியை நினைத்து மனம் குளிந்து போனார். தன் தந்தைக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை என்ற குறை தனது உறவு காரர்கள் உதவியதால் பெரிதாக தெரியவில்லை.

தீவிர பொதுவுடமை வாதியாக இருந்தவர் நயினார் குலசேகரன். இவருக்கு சோஷியலிஸ்ட்டு கட்சியின் செயல் வேகம் திருப்தி அளிக்கவில்லை. ஆகவே அவர் கம்யூனிஸ்ட் அனுதாபியாக மாறினார். அப்போது ஒரு தியாகச் சம்பவம் நடந்தது.

குடும்ப தலை மகன் நயினார் குலசேரனின் வருமானம் போதிய அளவு இல்லை. இதனால் இவரது குடும்பம் வறுமையில் வாடியது. அப்போது நட்டாத்தியில் பிராஞ்ச் போஸ்ட் ஆபீஸ் 1952ல் திறக்கப்பட்டது. அதில் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. மாதம் 20 ரூபாய் சம்பளத்தில் நயினார் குலசேகரன் அந்த வேலையில் சேர்ந்தார். அதன் பிறகு அந்த வருமானத்தினை கொண்டு அவர் குடும்பம் ஆறுதல் அடைந்தது.

ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. காரணம் 1952ல் சட்டசபை தேர்தல் வந்தது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பி.ஐசக் என்ற மில் தொழிலாளி போட்டியிட்டார். அவரை ஆதரித்தார் நயினர் குலசேகரன். இதனால் வேலையில் இருந்தாலும் தைரியமாக செந்திலாம் பண்ணை என்ற ஊரில் நயினார் குலசேகரன் தேர்தல் கூட்டம் நடத்தினார். இதில் ஐசக்கை ஆதரித்து வீர முழக்கம் இட்டார். இதன் காரணமாக தலைமை தபால் அலுவலகத்திலிருந்து நயினார் குலசேகனுக்கு நோட்டீஸ் வந்தது. அந்த நோட்டீசில் “நீங்கள் கம்னீஸ்ட், ஆகவே உங்களை ஏன் வேலையிலிருந்து நீக்க கூடாது” என்று காரணம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்து நயினார் , “ஆம்! நான் கம்யூனிஸ்ட் தான். ஆகவே நான் வேலையயை விட்டு விலகிக் கொள்கிறேன்”. என்று பதில் அனுப்பினார். விளைவு தன் குடும்பத்துக்கு வாழ்வளித்த ஓரே ஒரு வேலையும் பறி போய் விட்டது. அதன் பிறகு தன்னையே உருக்கி ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியைப் போல் ஆனார். அதன் பின் அவர் தியாகச் சக்ரவர்த்தியானார். அதன் பிறகு முழுக்க முழுக்க மக்களுக்கு உழைக்க ஆரம்பித்தார்.

“ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி தன் பொதுச் சேவையை தொடங்கினார். தூத்துக்குடி மாவட்டமும் சேர்ந்து இருந்த நெல்லை மாவட்டத்தில் விவசாய இயக்கங்களை உருவாக்கி, வறுமைப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். இதனால் பலமுறை சிறை சென்றார். இதனால் நிலச்சுவான்கள் மற்றும் ஆதிக்கக்காரர்களின் கொடுமைகளுக்கு ஆளானார்.

நெசவுத் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டு நெசவாளர் பட்டினி கிடந்தபோது, சாயர்புரம் பகுதியில் போராட்டம் நடத்தியதால் இவரும் இவரது நண்பர் ஜே.பி.டாஸ்&ம் கைது செய்யப்பட்டனர்.

பின் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. அன்று, கீழத்தட்டப்பாறை கிராமத்தில் மேல் ஜாதிக்காரர்களால் தலித் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட போது, அவர்களின் விடுதலைக்காக போராடினார். அந்த சமயம் மேல் ஜாதிக்காரர்களால் இவரை ஊருக்குள் வரக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனாலும் தடையை மீறி இவர் ஊருக்குள் சென்றார். அந்தப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றார். இவர் போராட்டத்தில் கீழத்தட்டப்பாறை என்ற தலித் கிராமம் ஒரு விழிப்புள்ள கிராமமாக மாறி விட்டது.

அது மட்டுமல்லாமல் சிவகளை கிராமத்தில் நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் கொடிகட்டிப்பறந்த போது தனது நண்பர்கள் கந்தப்பிள்ளை, மால்சாமி நாயக்கர் ஆகியோருடைய ஆதரவுடன், ஆதிக்க வர்க்கத்தினை எதிர்த்து சமூக நீதிக்கான போராட்டத்தை நடத்தினார்.

அந்த சமயம் பல சம்பவங்கள் நடந்தது. அதில் ஒரு சம்பவம் மனதை உருக்குவதாத அமைந்து இருந்தது.

ஒருநாள் சிவகளையில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நிலச்சுவான்தார்களின் கூலிப்படைகளால் மேடையில் வைத்து தாக்கப்பட்டார். அதன் பின் இவரை குற்றுயிரும் குறையுருமாய் அடித்து போட்டு விட்டார்கள். இதில் உயிர்போகும் நிலையில் குளத்திற்குள் தூக்கி எறியப்பட்டார். அப்போது அங்கு வந்த அவரின் நண்பர்கள் கந்தப்பிள்ளை, சுந்தரம் ஆகியோர் ஆதரவுடன் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளால் காப்பாற்றப்பட்டார்.
தூத்துக்குடி தாலுகா, கட்டாலங்குளம் கிராமத்தில் நடந்த குத்தகை விவசாயிகள் போராட்டத்தின் போது இவர் அதில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இவரை சூழ்ந்து கொண்ட கூலிப்படைகளை எதிர்த்து போரிட்டார். இதில் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனாலும் தைரியமாக எதிர்த்து நின்றார். குத்தகை விவசாயிகளில் நிலத்தில் உழவு செய்ய வந்த ஏர் முன்பு படுத்து உயிர் தியாக போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் பயனாக குத்தகை விவசாயிகளின் நிலம் பறி போகாமல் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள வெள்ளுர் கிராமத்தினை சேர்ந்தவர் அலங்காரம். இவரை சுற்று வட்டாரத்தில் கிராமத்து காந்தி என்று பெயருடன் அழைப்பார்கள். இவருடன் இணைந்து பல விவசாயப் போராட்டங்களை நடத்தினார் நயினார் குலசேகரன். இதை போலவே கிராமம் தோறும் சென்று விவசாய இயக்கங்களை பலப்படுத்தினார்.

இந்த சமயத்தில் தான் ஆறுமுகமங்கலம் மற்றும் மாரமங்கலம் பகுதியில் விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்க போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தினை அப்பகுதி தலித் விவசாயிகள் நடத்தி வந்தனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நயினார் குலசேகரன். அவர்களின் தோளோடு தோள் நின்று இவர் செயல்பட்டது. அந்த பகுதியில் நிலச்சுவான்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பல முறை நயினார் குலசேகரன் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியது இருந்தது. ஆனாலும் அவர் கவலை படவில்லை. மாபெரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தினார். உழைக்கும் தலித் விவசாயிகளிடமிருந்து நிலம் பறி போகாமல் பாதுகாத்தார். இதனால் விசாயிகளிடத்தில் நல்ல பெயர் பெற்றார்.

அத்துடன் தலித் விவசாயிகளுக்காக நீதிமன்ற படி ஏறவும் தயங்கவில்லை. தூத்துக்குடி நீதி மன்றங்களில் குத்தகை பாதுகாப்புச்சட்டம், நியாய வாரச் சட்டம் மூலம் சுமார் 300க்கு மேற்பட்ட வழக்குகளை நடத்தினார். இதில் வெற்றியும் பெற்றார். இந்த வழக்குகளை இவர் சார்பாக தூத்துக்குடி கிருஷ்ணன், பாளையங்கோட்டை பி.கார்த்தீசன், காலம் சென்ற மூத்த வழக்கறிஞர் என்.டி.வாணுமாமலை போன்ற சிறந்த வழக்கறிஞர்கள் முன் நின்று நடத்தினார்கள்.

நயினார் குலசேகரன் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா கமிட்டி செயலாளராகவும் பணியாற்றினார். இவர் இந்த கட்சியின் தன்னலம் பாரமல் உழைத்த காரணத்தினால் மாவட்ட, மாநில கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் விவசாய, தொழில் சங்க அமைப்புகளிலும் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றினார். நயினார் குலசேகரனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் ஆர்.நல்லக்கண்ணு போன்ற தலைவர்களுடன் நல்ல பழக்கம் உண்டு.
நயினார் குலசேகரன் இளமைக்காலம் தொட்டு அரசியலும், பொதுசேவையிலுமே மிக முக்கியமாக செயல்பட்டார். ஆகவே வறுமையில் வாடிய தனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவ முடியவில்லை. தலைமகன் வருமானம் இல்லாத காரணத்தினால் அவரது தாயார் மிகவும் பாதிக்கப்பட்டார். ஆனாலும் கூட அதை சகித்துக்கொண்டு முழுமையாக நயினார் குலசேகரின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தார்கள். கடைசிவரை தனது மூத்த மகனுக்காகவும் தனது குழந்தைகளுக்காகவும் வறுமையில் வாழ்ந்த அந்த தாய் இவரது குடிசையிலேயே காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக் சோசலிஷ கொள்கையை ஏற்றவர் இவர். பின்னர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்தார். காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயலாளராக பணிபுரிந்தார். அப்போது கமிட்டியில் உவரி துரைப்பாண்டியன், புளியங்குடி சங்கரப்பாண்டியன் பிள்ளை, சுதந்திரப்போராட்ட தியாகி கே.டி.கோசல்ராம் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். நயினார் குலசேகரன் மாவட்டச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய போது பல காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பு கிடைத்தது. பெருந்தலைவர் காமராஜ், சி.சுப்பிரமணியம். ஏ.பி.சி.வீரபாகு ஆகியோருடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவர்களையும் நயினார் குலசேகரன் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட விவசாய சீர்திருத்த சட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விவவசாயிகளிடம் குறைகளை கேட்டு, அதனை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யவேண்டும். 1964ல் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியில் 7 பேர் உறுப்பினராக இருந்தனர். இதில் பெருந்தலைவர் காமராஜ், ஏ.பி.சி. வீரபாகு போன்ற தலைவர்களின் விருப்பத்தின்படி நயினார் குலசேகரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனால் சுமார் 2 ஆண்டுகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்தார். விவசாயிகளின் ஆய்வு அறிக்கையை தயார் செய்தார். இவருடைய ஒத்துழைப்பை கமிட்டியின் கண்வீனராக இருந்த பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சீனிவாச ஐயர் மற்றும் மாயவரம் நாராயணசாமி நாயுடுவும், உறுப்பிரான இருந்த கோவை கம்பன் என்று புகழ் பெற்ற கருத்திருமனும் பாராட்டினார்கள். மற்று உறுப்பினர்களும் இவரது உழைப்பை காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவித்தனர். இந்த அறிக்கையை கண்ட காமராஜரும் பாராட்டினார்.

பிரதிபலன் பாரமால் உழைத்தவர் நயினார் குலசேகரன். காங்கிரஸ் கட்சியில் சிறந்த ஊழியர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். ஆகவே தான் நயினார் குலசேகரன் 1977ம் வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் திருவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் மிகவும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அவர் தோல்வியுற்றார். ஆனாலும் பெருவாரியான மக்கள் ஓட்டு கிடைத்தது எண்ணி பெருமிதத்துடன் மீண்டும் தனது பணியை உற்சாகத்துடன் தொடர்ந்தார்.

நயினார் குலசேகரன் மக்களுக்கு போரடி பல முறை சிறை வாசம் சென்றார். அவர் 1947ல் சுதந்திரம்அடைந்தவுடனே மக்களுக்காக போராட்டம் நடத்தினார். 1948ல் நட்டாத்தி கிராமத்தில் நடந்த ரேசன் கடை ஊழலை எதிர்த்து போராடினார். இதற்காக ஊர் பொதுமக்களை ஒன்று திரட்டி ரேசன் கடை முன்பு சத்தியாகிரகம் செய்தார். அப்போது சுமார் 23 வயதான இளைஞராக நயினார் குலசேகரன் இருந்தார். ஆனாலும் இந்த இளைஞர் தலைமையில், வயது முதிர்ந்த பெரியவர்கள் பலர் முன் நின்று போராட்டத்தை நடத்தினார்கள்.

ராஜாஜி முதல் மந்திரியாக இருந்தபோது குலக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் போராட்டம் நடந்தது. அதில் நட்டாத்தி நயினார் குலசேகரன் கலந்துகொண்டார். இந்த போராட்டத்தின் போது சாயர்புரத்தில் கொடும்பாவி எரிப்புப்போராட்டம் நடந்தது. இதனால் செபத்தையாபுரம் நண்பர்கள் பெருமாள் நாடார், குருவையா, நந்த கோபாலபுரம் மாசனக்கோனார் மற்றும் நண்பர்களுடன் நயினார் குலசேகரன் கைதானார். இவர்கள் திருவைகுண்டம் கிளைச்சிறையில் பல நாட்கள் சிறை வைக்கப்பட்டார்.

காலங்கள் கடந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு பின் தி.மு.க. ஆட்சி வந்தது. அந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது தமிழ்நாடு முழுவதும் நடந்த விவசாயிகள் போராட்டம் பெரிதாக நடந்தது. அப்போது காங்கிரஸ் மாவட்ட செயலாளராக இருந்த நயினார் குலசேகரன் நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு வைத்து அவரை கைது செய்தனர். பின் நயினார் குலசேகரன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது போராட்டங்கள் தனிநபர் பிரச்சனைக்காகவும் நடந்தது. நயினார் குலசேகரன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தபோது சாயர்புரம் போப் கல்லூரியில் ஆசிரியர்கள் சம்பளப் பிரச்சனை விஷ்வரூபம் எடுத்தது. இதனால் ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். அப்போது நயினார் குலசேகரன் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினார். முதலில் உயிர் தியாக உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. அதன் பின் பஸ் மறியல் நடத்தினார். இதானல் நயினார் குலசேகரன் உள்பட சர்வக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டைசிறையில் 15 நாட்கள் கடுங்காவலில் வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் புதிய துறைமுக கட்டும் வேலை மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதும் நயினார் குலசேகரன், காங்கிரசின் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்தில் துறைமுகம் கட்டுமான பணி தாமதமானது. இதற்கு காரணம் வேலையில் முறைகேடுகள் நடந்தது தான். இதை தட்டிக் கேட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நயினார் குலசேகரன் இறங்கினார். இதற்காக காங்கிரஸ் தொழிற்சங்கத்தினை துறைமுகத்தில் அமைத்தார்.
இதற்கிடையில் துறைமுக நிர்வாகத்தால் துறைமுகத்திற்குள் வராதே என்று 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. இந்த தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தினார். அதோடு மட்டுமல்லாமல் இக்குறைபாடுகளை அப்போது மத்திய கப்பல்துறை அமைச்சராக இருந்த ராஜ்பகதூருக்கு தெரிவித்தார். அமைச்சரை தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தார். பின் பழிவாங்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை காப்பாற்றினார். துறைமுக வேலை காலதாமத பிரச்சனைகளுக்கும் அமைச்சர் மூலம் தீர்வு காணப்பட்டது.
மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சனை என்றால் நயினார் குலசேகரன் முதல் ஆளாக நின்று போராடுவார். அப்படிதான் ஒருசமயம் சாயர்புரம் பேரூராட்சி, நட்டாத்தி, கட்டாலங்குளம் ஊராட்சிகளின் மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் தீர்வு காண உண்ணாவிரத்தில் ஈடுபட்டார் நயினார் குலசேகரன். ஆனால் அந்த போராட்டம் கடுமையான போராட்டமாக நடந்தது. சுப்பிரமணியபுரத்தில் இரவு, பகலாக தண்ணீர் கூட அருந்தாமல் தொடர்ந்து 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதில் இவர் உயிர் போய் விடும் என்று கூட பலர் நினைத்தனர். ஆனால் உயிரை கூட பெரிதாக நினைத்திடாமல் உண்ணாவிரதம் இருந்தார். அது மட்டுமின்றி சுமார் 1000 மக்களைத் திரட்டி சாயர்புரத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டார். இவருடைய போராட்டத்தை அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறை டி.எஸ்.பி.யும், தூத்துக்குடி ஆர்.டி.ஓ.வும் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தண்ணீர் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தினை வாபஸ் பெற முடியும் என்று இவர்கள் கூறிய காரணத்தினால். இவரது வைராக்கியத்தினை எண்ணி வியந்து அரசு அதிகாரிகள் குடிநீர் பிரச்சனை சம்பந்தப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.

சுமார் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் தீவிர தொண்டாற்றிய நயினார் குலசேகரன் ஏ.பி.சி.வீரபாகுவின் வலது கை என்று பாராட்டப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஏ.பி.சி. வீரபாகு 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது பிரதிநிதியாக அவர் கிராமங்கள் தோறும் சென்று செயல்பட்டார். அப்போது கூட்டுறவு பால்பண்ணை, நெசவாளர் சொசைட்டி அமைத்தல், விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், சாலை வசதிகள், பாலங்கள் அமைத்தல் உள்பட பல பணிகளை செய்தார். பள்ளி மாணவர்களுக்கு கல்வி வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய உதவிகளை பிள்ளை உதவியுடன் செய்து கொடுத்தார். இப்படி பொது மக்களின் நலனுக்காக உழைத்த நயினார் குலசேகரனுக்கு வீரபாகு பிள்ளை ஒரு வாய்ப்பை கொடுத்தார்.

அதன்படி 1977ல் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஏ.பி.சி.வீரபாகுபிள்ளை ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றும், ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இரண்டாக உடைந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்தது. ஆகவே ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இந்த பகுதி இருந்தது. அந்த சமயத்தில் நெல்லை மாவட்டத்தில் இந்திரா காங்கிரசுக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார்.

1971ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியுடன் தமிழ்நாட்டில் 11 இடங்களில் போட்டியிட்டது. அந்த சமயத்தில் காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பை ஏற்று நடத்திய ஏ.பி.சி.வீரபாகு தென்காசி தொகுதியில் செல்லச்சாமி என்ற ஒரு சாதாரண மனிதரை நிறுத்தினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக நயினார் குலசேகரன், புளியங்குடி சங்கரபாண்டியன் பிள்ளை ஆகியோரை நியமித்தார். இவர்கள் போராட்டமும். இந்திரா காந்தி மீது இருந்த செல்வாக்கும் அந்த சமயத்தில் செல்லச்சாமி வெற்றிபெற்றார்.

நயினார் குலசேகரன் மிகச்சிறந்த ஆன்மீகவாதி. தெய்வத்தின் மீது பலத்த நம்பிக்கையுடையவர். ஆகவே தங்களது குல தெய்வமான நட்டாத்தி அம்மையார் அம்மன் திருக்கோவில் திருப்பணி செய்து மகா கும்பாபிஷேகம் நடத்தினார். அத்துடன் கும்பாபிஷேகம் நடந்த 24.01.1999 அன்று ஸ்ரீஆதி அடைக்கலம் காத்த அம்மையார் அம்மனும், ஆதி வரலாறும் என்ற ஆன்மீக நூலையும் வெளியிட்டார்.

இந்தியாவின் 50வது சுதந்திரத்தின் பொன்விழாவினை முன்னிட்டு தியாகிகளை தனது நண்பர்களுடன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.சுதந்திர போராட்ட தியாகிகளை தரிசனம் காணுதல் என்ற செயல் திட்டதின் மூலம் 50 வது சுதந்திர தின பொன் விழா ரதயாத்திரையை நடத்தினார். இதற்கு தேச பக்தர்களான ஆர்.ஜே.சுந்தர்சிங் காந்தியவாதி ஏ.அய்யம்பெருமாள் நாடார், நட்டாத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் ஆகியோர் உதவி புரிந்தனர். காந்திய வழியில் ஊருக்கு 10 பேர் இயக்கம் என்ற இயக்கத்தினை நமது பகுதியில் துவங்கினார். இதற்கான இந்த இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் காந்தி சேகரன், தூத்துக்குடி சவுந்திரபாண்டியன் மற்றும் பெரியவர்களுடன் ஊர் ஊராக சென்றார். அங்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளை நேரில் சந்தித்து வணங்கினார்கள். பின் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தபின் காங்கிரஸ் ஊழியர்களிடத்தில் சோர்வு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் நயினார் குலசேகரன் மனம் தளரவில்லை. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஏற்பாடு செய்தார். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளின் மாநாட்டை ஸ்ரீவைகுண்டத்தில் நடத்தினார். இதற்காக பெருந்தலைவர் காமராஜரை கூட்டிவந்து பேச வைத்தார். இதற்காக அவர் உறங்காமல் அழைந்து திரிந்து வேலை செய்தார். இதை பற்றி கேள்ளிபட்ட பெருந்தலைவர் காமராஜர் மனம் நெகிழ்ந்து போய் விட்டார். அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பெருந்தலைவர் காமராஜரால் 9 தடவை நயினார் குலசேகரன் என்ற பெயரை உச்சரித்து பேசினார்.

காலங்கள் கடந்தது. ஒரு கால கட்டத்தில் இவர்அரசியல் கட்சிகள் மீது வெறுப்படைந்தார். ஆனாலும் மக்கள் பணியை விட தயராகவில்லை . எனவே நயினார் குலசேகரன், “மக்களை மிஞ்சிய” அரசாங்கமும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று எண்ணினார். ஆகவே சுமார் 15 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சிகளையும் சார்ந்து இல்லாமல் தனி ஒரு இயக்கத்தினை ஏற்படுத்த முடிவு செய்தார். அந்த இயக்கம் மூலம் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் நலன்களைப் பாதுகாக்க பொது அமைப்புகள் மூலம் தீவிரமாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச் சங்கம். இந்த சங்கம் ஏற்படுத்த பலர் உதவி புரிந்தனர். அதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் காந்தியவாதியான உமரிக்காடு அய்யம்பெருமாள் நாடார், காலம் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஜெ.சுந்தர்சிங் ஆகியோர் ஆவார்கள். இவர்களோடு பொது மக்கள் மீது ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தொண்டாற்றி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் வருடந்தோறும் சுமார் 150 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

கிராம மக்களின் வாழ்வு பிரச்சினைகள் தீருவதற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். இதன் மூலம் கிராம மக்களின் ஆதரவை பெற்று பணியாற்றி வருகிறார். இந்த கிராம வாழ் மக்கள் நலச் சங்கத்தை கடந்த 12 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சுமார் 5 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை என்ற விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் தாமிரபரணி நதிநீர் சுரண்டப்படுவதை பாதுகாக்கவும், இயக்கங்கள் போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் குரல் மாவட்ட அரசு நிர்வாகத்திற்கும், மாநில அரசு நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கும் சென்றடைந்துள்ளது.
நயினார் குலசேகரன் விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் மீது புள்ளி விவரமாகப் பேசவும், எழுதவும் ஆற்றல் படைத்தவர். தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின் 2004ம் வருடத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைகளின் பாசனப்பகுதி விவசாயம் பற்றி ஓர் ஆய்வு அறிக்கையை புள்ளி விபரத்துடன் தயார் செய்தார். இந்த ஆய்வு அறிக்கையின் மீதே தாமிரபரணி நீர் பாதுகாப்புப் பேரவை தற்போது கோரிக்கை போராட்டங்களை நடத்தி வருகிறது.
8.5.2006ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது ஒரு விரிவான புள்ளி விபரங்களுடன் தேர்தல் அறிக்கையை தயார் செய்து தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை சார்பாக வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் உழவர் தின விழாவை நடத்தி விவசாயிகளின் உடனடி கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி வருகிறார். அதை முதல் அமைச்சர் கவனத்துக்கு உடனே அனுப்பி வைத்துள்ளார். தற்போது அக்கோரிக்கைகள் மீது பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் விவசாயிகள் விழிப்புணர்வு பிரச்சாரம், சுதந்திர விழா, தொழலாளர் தினமான மே தினவிழா, விவசாயிகள் மாநாடு, கையெழுத்து இயக்கம் இப்படி பல சேவைகைளை இந்த பேரழிவை செய்து வருகிறது.
தலித் இனமக்களுக்காக தியாகப்போராட்டங்களை நடத்தி வரும் இபா.ஜீவன்குமார், வழக்கறிஞர் இ.அதிசயகுமார். திருலோச சுந்தர் ஆகியோருடன் இணைந்து போராடி வருகிறார். இவருடைய போராட்டத்தில் சமூக நீதிக்கான தேசிய தலித் முன்னணி, ஜனநாயக முற்போக்கு வழக்கறிஞர் பேரவை, தூத்துக்குடி மாவட்ட கடல்சார் தொழில் புரிவோர் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம், பி.கணேசன் பொறுப்பிலிருக்கும் மக்கள் இயக்கம், காலம் சென்ற காந்தியவாதியான காந்தி சேகரன் பொறுப்பில் இருந்த காந்திய வழியில் ஊருக்கு 10 பேர் இயக்கம் ஆகிய அமைப்புகளுடனும் கூட்டணி வைத்து கொள்வார். அது மட்டுமல்லாமல் நியாயமான போராட்டம் எங்கு நடந்தாலும் நயினார் குலசேகரன் அங்கு சென்று அந்த போராட்டத்தில் சேர்ந்து கொள்வார்.

“வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். ஆனால் இவரோ வாடியதோடு மட்டும் அல்லாமல் தள்ளாத வயதிலும் விவசாய நெல் பயிர்களுக்கு தண்ணீர் விடக்கோரி ஸ்ரீவைகுண்டத்தில் உயிர் தியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதனால் மயக்கம் ஏற்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இறக்கும் போது 92 வது. அந்த வயதிலும் 20 வயது வாலிபனைப்போல் ஓடியாடி சேவை செய்தார். அவருடைய வாழ்நாளில் இளமை பிராயத்தை தவிர சுமார் 60 ஆண்டுகள் தொடர்ந்து பொதுநல சேவை செய்தார். அவர் தாமிரபரணி நதியும், விவசாயிகளின் உரிமையும் என்ற 202 பக்கம் கொண்ட புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
நமது பாரத புண்ணிய பூமி விடுதலை அடைந்து 50 ஆண்டுகளை கடந்துள்ளது. அந்த சுதந்திரத்தினை பேணிகாக்கவேண்டும். சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகளை மதிக்க வேண்டும் என்று நயினார் குலசேகரன் மிகவும் விசேசமாக கருதுவார்.

50வது சுதந்திரத்தினப் பொன்விழாவை முன்னிட்டு விடுதலை போராட்டத்தின் நினைவாக ஆகஸ்ட் 9ம் தேதி நமது மாவட்டத்தில் தல யாத்திரை நடத்தினார். அப்போது நம்மோடு வாழ்ந்து வரும் தியாகிகளான திருவாளர்கள் ஆறுமுகநேரி எம்.எஸ்.செல்வராஜ், திருச்செந்தூர் பென்சமீன், பி.எஸ்.நாராயணன், வி.மந்திரம், உடன்குடி காசி, பூவலிங்கம், சீர்காட்சி நாராயணன், குலசேகரன்பட்டனம் ஜி.ஈ.முத்து, நெல்லயைப்பன், கடயனோடை மகராஜன், குரங்கனி, நெல்லை ஜெபமணி, அய்யாத்துரை நாடார், காயாமொழி ஆறுமுகப்பாண்டியன், நாதன்கிணறு ஏ.மகாராஜன் நாடார், என்ஆறுமுகப்பாண்டியன், செங்குளி ரத்தினகுருசாமி நாடார், ல.பெரியசாமி நாடார், பேயன்விளை எம்.எஸ்.நடராஜன், ஆறுமுகநேரி தங்கப்பெருமாள், அழகுவேல் நாடார், கோவில்பட்டி என்.ராமானுஜம் நாயக்கர், செல்வராஜபுரம் டி.லட்சுமணன், ஆறுமுகநேரி அய்யம்பெருமாள் நாடார், தூத்துக்குடி வி.ஆர்.பொன்னம்பலம், நா.முத்துவிநாயகம், பி.கே.செல்வநாயகம், வி.எஸ்.எஸ்.கே.கணேசன் ஆகிய 27 தியாகிகளை அவர்கள் வீடு தேடிச் சென்று தியாகிகளின் திவ்விய தரிசனம் கண்டார். அவர்களுக்கு தமது குழுவோடு மரியாதை செலுத்தினார்.

தாமிரபரணிக்காவே போராடிய இவர் கடந்த வருடம் ஜீலை 30ம் தேதி இறந்தார்.

அவரின் முதலாண்டு நினைவேந்தல் செய்துங்கநல்லூரில் அனுசரிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் காந்திமதிநாதன் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாநில துணை தலைவர் கஸ்ஸாலி நயினார் குலசேகரன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் அருமைராஜ், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், சங்கிலிராஜ், சரவணன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.