கலைமாமணி சங்கரபாண்டியன்

இன்று நம்மோடு கலைமாமணி சங்கரபாண்டியன் இல்லை. ஆனாலும் அவரது புகழ் என்றுமே மறையாது. அவரது துணைவியார் சாந்தியம்மாளுக்கும், குடும்பத்தாருக்கும் இறைவன் ஆறுதல் தர வேண்டுகிறேன். தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவருக்கு விருது கொடுத்து கௌரவித்தார்கள். அதே மேடையில்இளசை மணியன், கலைமாமணி கைலாச மூர்த்தி, கலைமாமணி ஈஸ்வர மூர்த்தி அய்யா, இசையப்பாளர் இசக்கியப்பன் ஆகியோரோடு நானும் விருது வாங்கினேன். சிரித்த முகத்தோடு தம்பதிகள் இறங்கி வந்தார்களே.. இன்று சங்கரபாண்டியன் மறைந்து விட்டார் என்ற தகவல் என்னால் நம்பவே முடியவில்லையே.
அன்னாரின் மறைவுக்கு இந்த கட்டுரையை அஞ்சலியாக செலுத்துகிறேன். இக் கட்டுரை கடந்த 20.11.2013 அன்று நான்(முத்தாலங்குறிச்சி காமராசு) எழுதி காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘நெல்லை நாட்டுப்புற கலைஞர்கள்’ என்னும் நூலில் இருந்து…

தமிழக கலைகள் பல அழிந்த வண்ணம் உள்ளது. சில கலைகளை காப்பாற்றி கொள்கிறோம் என்ற பெயரில் தன் தரம் மறந்து, கொச்சை வார்த்தைகளையும் , இரட்டை வார்த்தைகளையும் பேசி, அங்க அசைவுகளை அசிங்கமாக காட்டி பழங்கால கலைகளை கொச்சை படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் தனது 7 வயதில் ஒருவர் காவடியாட்டம் ஆடதுவங்கி, தனது துணைவியாருக்கு கரகம் ஆட கற்றுக்கொடுத்து தற்போதும் தன் திறமையால் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, நாகர்கோயில் மாவட்டங்களில் சிம்மசொப்பனமாக விளங்கி வரும் ஆட்டகாரர் சங்கரபாண்டியன் அவர்கள். இவர் தனது குழுவில் அசிங்கமான ஆடை கூட அணிவதில்லை என்று கங்கணம் கட்டி திறமையை முன் வைத்து கரகட்டாத்திலும், காவட்டியாட்டிலும் தன்னிகரற்று விளங்குகிறார்கள். கலைமாமணி சங்கரபாண்டியன் – சாந்தி தம்பதிகளை இந்த காவ்யா காலாண்டு இதழுக்கு நேர் முகம் கண்டோம்.
தற்போது தனது 69 வயதிலும் கலைமாமணி சங்கரபாண்டியன் காவடி ஆடுகிறார். சாந்தியம்மாள் கரகாட்டத்தில் துளி கூட ஆபாசம் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இதனால்தான் தற்போது ஆபாச வசனமும், ஆடையும் அணிந்து ஆடும் கரகாட்ட கலைஞர் மத்தியில் கரகம் ஆடாமல் ஒதுங்கிவிட்டார். தற்போது பாடகியாகவும், ஒய்வு நேரத்தில் பூ கட்டி காலம் கழித்து வருகிறார். இந்த தம்பதிகளின் வாழ்க்கை தற்போது மிக கஷ்டமாக உள்ளது.
காவடியாட்டம் ஆடி தனது கண்களில் ஊசி எடுத்து தற்போது கண் பார்வை மங்கிய நிலையில் உள்ள சங்கரபாண்டியன், தள்ளாட வயதிலும் ஆட்டத்தினை ஆடிக்கொண்டே இருக்கிறார்.
சேரன்மகாதேவி அருகில் உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவரிடம் நாங்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அழித்த பதிலும் வருமாறு.

கேள்வி -அய்யா உங்கள் பிறப்பிடத்தினை பற்றி சொல்லுங்களேன்.
பதில் – நான் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோயில் குளம் என்ற கிராமத்தினை சேர்ந்தவன். எனது தந்தை பெயர் அனைஞ்சி பெருமாள் தேவர், தாயார் சுப்பம்மாள். எனது தந்தை அனைஞ்சி பெருமாள்தேவர் பெரிய கரகாட்ட கலைஞர். அவர்தான் என்னை காவடியாட்ட கலைஞராக அறிமுக படுத்தினார். நான் 7 வயதில் இருந்தே காவடியாட்ட கலைஞராகி விட்டேன்.

கேள்வி – உங்கள் அப்பாவை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.
பதில் – எனது தந்தை அனைஞ்சி பெருமாள் தேவர் தற்போது உள்ளது போல அல்லாமல் கரகத்தில் வித்தியாசமான முறையில் ஆடுவார். தற்போது கும்பம் வைத்து ஆடுபவர்கள் போல இவர் ஆடவில்லை. இவர் உருளை கும்பம் வைத்து ஆடுவார். அதை தலையில் வைத்துக்கொண்டு நிற்பது சாதரண காரியம் அல்ல. உருளை கும்பம் ஆடுவது திறமை யானதாகும். அது மட்டுமல்லாமல் இந்த ஆட்டம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். இவர்தான் முதன் முதலில் பெண் கரகாட்டத்தினை அறிமுக செய்தார்.

கேள்வி- ஆச்சரியமாக இருக்கிறதே.. பெண் கும்பம் திருநெல்வேலியில் தான் அறிமுக படுத்தப்பட்டதா?
பதில் – ஆமாம் என் தந்தை தான் முதன் முதலில் பெண் ஆடும் கும்பத்தினை அறிமுகம் செய்தார். எங்கள் வீட்டில் சேலத்தினை சேர்ந்த ருக்குமணி என்ற பெண் வளர்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கு கரகம் ஆட சொல்லிக்கொடுத்த என் தந்தை, இரண்டாம் தாரமாக அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அவர் தான் முதல் பெண்கரகாட்டகாரர். கரக கலையில் எனது தந்தையும், சித்தியும் பல யுக்திகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தனர். அதோடு மட்டுமல்லாமல் 1958 இல் டெல்லி சென்று அப்போதைய பாரத பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பரிசு பெற்றார். அந்த சமயத்தில் 26 மாகணங்களில் இருந்து பல கலைஞர்கள் வந்து இருந்தார்கள். அதில் நமது ஊரை சேர்ந்த கரக ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. நேருவுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. எனவே எனது தந்தை¬யும், எனது சிறிய தாயாரையும் கூப்பிட்டு பேசி, வாழ்ந்து தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் மறைந்த பாரதபிரதமர் இந்திராகாந்தியும் உடன் இருந்துள்ளார்.

கேள்வி- கரகம் ஆட்டம் எப்படி ஆரம்பமானது?
பதில்- கரகம் என்பது புராண காலத்தோடு இணைந்தது. ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்கள், தனது மனைவி திரௌபதையோடு வனதேசத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் திரௌபதிக்கு மிகவும் அசதி ஏற்பட்டது. இதனால் திரௌபதை அயர்ந்து தூங்கி விட்டாள். அப்போது, அங்கே ஒரு அரக்கன் வந்தான். திரௌபதையின் அழகில் மயங்கினான். உடனே அவளை அடைய ஆசைப்பட்டான். காமநோக்கத்தில் அவளின் அருகில் சென்றான். தீடீரென்று விழித்து பார்த்த திரௌபதி அரக்கனை கண்டாள். உடனே தன்னை காப்பாற்றி கொள்ள தலையில் கரகம் எடுத்தாள். ஆவேசமாக ஆடினாள். அரக்கன் அவளின் ஆவேச நடனத்தினால் கீழே சரிந்தான். பின் உயிர் தப்பித்தால் போதும் என்று அந்த இடத்தினை விட்டு ஓட ஆரம்பித்தான்.
இப்படித்தான் கரகாட்டம் துவங்கியது. ஆகவே தான் இந்த கரக ஆட்டத்தினை அம்மன் கோயில்களில் முக்கிய ஆட்டமாக வைக்கிறார்கள். கோயில் திருவிழாக்களில் கரகம் எடுத்து வந்தால், அந்த பகுதியில் துன்பங்கள் எல்லாம் அழியும். மழை பொழியும். நன்மை நடக்கும் என்பது ஐதீகம். எனவேதான் அம்மன் கோயிலில் கரகம் எடுத்தல் மிக முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. ஆரம்ப கால கட்டத்தில் கரகத்தினை கோயிலுக்கு பூசாரி எடுத்து வந்தனர். அதன்பின் கரகம் சிறிது கேளிக்கையாக மாறியது. எனவே ஆண்கள் கரகம் எடுத்து நிகழ்ச்சிகளில் ஆட ஆரம்பித்தனர். அதன் பின் பெண்களும் கரகம் எடுத்து ஆட ஆரம்பித்தனர். ஆனால் அந்த ஆட்டத்திலும் பக்தி இருக்கும். பராம்பரியம் இருக்கும். சாகஸ நிகழ்ச்சிகள் இருக்கும். தங்கள் திறமைகளை ஆட்டகாரர்கள் வெளிபடுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் மாறி மாறி வரும்.

கேள்வி-கரக ஆட்டத்தின் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் என்பதை சொல்லுங்களேன்.
பதில் – கரக ஆட்டத்தில் மிக சிறப்பான விஜயங்கள் இருக்கும். அந்தகாலத்தில் கரகம் ஆடுபவர்கள் பல வித்தைகளை செய்வார்கள் குறிப்பாக கண்களை இறுக்க கட்டிக்கொண்டு கோமாளி வயிற்றில் வாழைக்காயை வைத்து அதை வெட்டுவார்கள். தீ பந்தம் விளையாடுவார்கள். தீயை வளையத்தினை சுற்றி எரிய வைத்து விட்டு அதனுள் கரகத்துடன் நுழைவார்கள். ஏணி மீது கரகத்தினை வைத்துக்கொண்டு ஏறுவார்கள். கரகத்தினை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிளை கையில் பிடிக்காமல் சக்கரத்தினை மட்டும் தலைகீழாக, அதே நேரம் கும்பம் சரியாமல் கையால் சுற்றுவார்கள், ஒரே வளையத்துக்குள் கும்பத்தினை வைத்துக்கொண்டு இருவர் நுழைவார்கள். இது போன்ற விளையாட்டுகளை செய்து நம்மை மெய்சிலிர்க்க வைப்பார்கள். கும்பத்தினை வைத்துக்கொண்டே தரையில் வைத்திருக்கும் ஊசியை கண் இமையால் எடுப்பார்கள். சோடா பாட்டிலை புறங்கையை கட்டிக்கொண்டு கும்பத்தினை வைத்துக் கொண்டு வாயால் எடுப்பார்கள். உரல் மீது ஏறி நின்று ஆடிக்கொண்டே உரலை கடத்தி செல்லுதல் போன்ற பல விளையாட்டுகளை செய்து காட்டுவார்கள். திருவிழாக்காலங்களில் விடியவிடிய இந்த விளையாட்டுகள் நடைபெறும். இந்த விளையாட்டுகளை அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களிப்பார்கள். கும்பம் ஆடுபவர்கள் தீசட்டியை தனது வெறுங்கையில் வைத்துக்கொண்டு ஆடுவது அதிசயமாக இருக்கும். இந்த விளையாட்டு ஆடும் எங்களை கடவுளின் குழந்தைகளாகவே மக்கள் பார்ப்பார்கள். இதற்காக நாங்கள் பல நாள்கள் விரதம் இருந்துதான் கரகாட்டம் ஆட கோயிலுக்கு வருவோம். எங்களை எந்தவொரு பிரச்சனையின்றி அம்மன் தான் காப்பாற்றுவார்.

கேள்வி- உங்கள் அப்பா கரகாட்டம், நீங்கள் எப்படி காவடி ஆட்டத்துக்கு வந்தீர்கள்?.

பதில்- சுமார் 60 வருடங் களுக்கு முன்பு அவர் கரகாட்டத் தில் பிரபலமாக இருந்தார். அதுபோன்று எங்கள் சித்தியும் திறமையாக கரக ஆட்டத்தில் மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருந்தார். எனக்கு அப்போது 7 வயது. நானும் கரகம் ஆடினால் மக்களை கவர போது மானதாக இருக்காது. எனவே ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று, என் அப்பாத்தான் “நீ… காவடி எடுத்து ஆடு” என்றார். நானும் அப்பா சொல்லை அப்படியே கேட்டுக்கொண்டு காவடி எடுத்து ஆட ஆரம்பித்து விட்டேன். கரகத்தினை விட காவடி ஆட்டம் மிக கஷ்டம் தான். ஆனாலும் கடந்த 62 வருடமாக நான் காவடி ஆடிக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி- காவடி ஆட்டம் எந்த பகுதியை சேர்ந்தது?. எப்படி காவடி ஆட்டம் நெல்லை மண்ணில் பிரசித்தி பெற்றது-?.
பதில் – காவடி என்றாலே முருகன் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்டம் தான். நடைபயணம் செய்பவர்கள் அலுப்பு தெரியாமல் இருக்க காவடி ஆடுவார்கள். குறிப்பாக ஊத்து மலை ஜமீன்தார் இருதாலய மருதப்பதேவர் கழுகுமலைக்கு ஊத்துமலையில் இருந்து காவடி எடுத்து செல்வார். அப்போது சென்னிகுளம் அண்ணாமலைரெட்டியார் பாடிய காவடி சிந்து பாடிக்கொண்டே தான் செல்வார்கள்.
ரெட்டியார் இயற்றிய காவடி சிந்து மிகவும் பிர சித்தி பெற்றது. ஒரு சமயம் இந்த காவடி சிந்து ஐ.நா சபையி லேயே பாடப்பட்டது. மதுரை சுப்பு லெட் சுமி அம்மாள் இந்த காவடி சிந்தை ஐ.நா. சபையில் பாடி னார்கள். இது மிக வும் பிரசித்தி பெற்ற தாகும்.
முருகன் இருக்கும் இடமெல்லாம் காவடியும், காவடி சிந்தும் இருந்தாலும் கூட நெல்லை மண் ணில் இருதாலய மரு தப்பர் அரவணைப் பில் அண்ணாமலை ரெட்டியார் உருவாக் கிய காவடி சிந்து தான் மிகவும் சிறப்பு பெற்றது.
எனவே நாம் நெல்லை மண்ணில் காவடியை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.

கேள்வி -இந்த காவடி ஆட்டத்தில் நீங்கள் என்ன திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பதில் – காவடியை நான் தலையில் எடுத்து, அப்படியே கையை பிடிக்காமல் படுத்தப்படியே கால்வரை நகர்த்தி விடுவேன். அதோடு மட்டுமல்லாமல் பாட்டில் ஒன்றில் ஏறி நின்று காவடியை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவேன். காவடியை இறக்காமலேயே கையை பின்னால் கட்டிக்கொண்டு, தரையில் வைத்திருக்கும் ஊசியை கண் இமையால் எடுப்பேன். சிறிது தவறினாலும் கண்ணில் ஊசி குத்தி விடும். எனவே மிக கவனமாக கண்ணில் ஊசியை எடுப்பேன். வாய்க்குள் இருந்து கலர் கலராய் பல மீட்டர் தூரம் கலர் தாள் எடுப்பேன். நான் ஆடிக்கொண்டிருக்கும் போது, சக ஆட்டகாரர் என் வாயில் இருந்து கலர் பேப்பரை அனுமார் வால் போல இழுப்பார். இந்த விளையாட்டு அங்கிருக்கும் அனைவரும் ரசிக்கும் ஒரு அபூர்வ கலையாகும். இதை தற்போது உள்ள தலை முறையினர் கூட ஒன்ஸ்மோர் என்று கேட்டு ரசிப்பது உண்டு. பல கல்லூரியில் இந்த விளையாட்டை நடத்தும் போது பலமான கைதட்டு விழும்.

கேள்வி – உங்கள் மனைவியும் கரகாட்ட காரர். அவரை எப்போது சந்தித்தீர்கள். அவருக்கு கரகாட்டத்தினை கற்று கொடுத்தது யார்?
பதில் – என் மனைவி பெயர் சாந்தி. இவரை நான் என் சிறு வயதிலேயே சந்தித்தேன். அதன் பின் அந்த பெண்ணை கரக ஆட்டத்தில் நன்கு பழக்கினேன். கரகம் ஆட தெரிந்த பிறகு என்னோடு நிகழ்ச்சிக்கு கூட்டிசென்றேன். அதன் பின் வாழ்க்கை துணையாகவும் ஆக்கி கொண்டேன். அவர் நல்ல கரகாட்ட காரர். எங்கள் நிகழ்ச்சியில் துளி அளவுகூட ஆபாசம் இருக்காது. என் மனைவி கணுக்கால் வரை பேண்ட் அணிந்திருப்பார். கால்கள் மற்றும் எந்த உடல் பாகமும் வெளியே தெரியாத வண்ணம் நிகழ்ச்சியில் தோன்றுவார். அதுபோல் ஆடும் போதும் ஆபாச வசனம் பேச மாட்டோம். எங்கள் திறமைகளை மட்டும் சிறப்பாக வெளியே காட்டுவோம்.

கேள்வி- எங்கேயெல்லாம் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறீர்கள்.
பதில் – நமது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் பல இடங்களில் எங்கள் நிகழ்ச்சி நடந்து உள்ளது. தமிழ் மாநிலம் மட்டுமல்லாமல் பல மகாணங்களுக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்த சென்று இருக்கிறோம். இதுவரை 1 லட்சத்தக்கு மேல் நிகழ்ச்சி நடத்தியிருப்போம். ஓசூர், ஆந்திரா, குஜராத், டெல்லி, மும்பை , கேரளாவில் உள்ள அனைத்து இடங்களிலும் எங்கள் நிகழ்ச்சி நடந்துள்ளது. எங்களை பாராட்டி பல பரிசுகளை ஆங்காங்கே உள்ள மக்கள் வழங்கியுள்ளார்கள்.

கேள்வி – அரசு எதுவும் உங்களுக்கு பரிசு வழங்கியதா?
பதில் – ஆட்டம், நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி என்று ஒடியாடிக்கொண்டிருந்த காரணத்தினால் நானாக எந்தவொரு பரிசுக்கும் முயற்சி செய்யவில்லை. ஆனால் 2006 ஆம் வருடம் என்னை இனம் கண்டு “தமிழ் முது மணி” என்ற பட்டத்தினை தமிழ் வளர்ச்சி துறை சர்ர்பில் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு எனக்கு கலைமாமணி விருதை அளித்து கௌரவித்தது. டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்த போது எனக்கு அந்த விருது கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நான் எங்கு சென்றாலும் என் நிகழ்ச்சியை கௌரவித்து மக்கள் பரிசளிப்பது பெரிய விருது தானே..!!!

கேள்வி – இந்த கலையை பற்றி மக்களிடம் ஏதாவது சொல்லவிரும்புகிறீர்களா?.
பதில் – என்னை பொறுத்தவரை இந்த கரகம் மற்றும் காவடி கலையை பரப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் யாரும் இந்தக்கலையை படிக்க முன்வரவில்லை. இதனால் மனவருத்தம் தான் எனக்கு ஏற்படுகிறது. கரகத்துக்கு முற்காலத்தினை போல் நல்ல வரவேற்பு இல்லை. இதுவும் வேதனையாகத்தான் இருக்கிறது. இரட்டை அர்த்தம் வசனம் தான் தற்போது கரகம் என்றாகிவிட்டது. ஆனாலும் கூட, நல்ல மேடைகளில் முற்போக்கு சிந்தனையாளர்கள், எங்களை போன்ற கரக, காவடிகாரர்களை வைத்து தான் நிகழ்ச்சி நடத்துக்கிறார்கள். அதையும் அனைத்து மக்களும் தாய் தந்தை, மகள், மருமகன், மகன், மருமகன், பேரன் , பேத்தி என்று அமர்ந்து ரசிக்கிறார்கள். பார்க்கிறார்கள். ஆனால் இன்று திருவிழாவில் கரகத்தினை பார்க்க ஆளே இல்லை. எனவே நல்ல ஆட்டத்துக்கு என்றுமே மதிப்பு இருக்கிறது என்பதை மக்கள் விரும்புகிறார்கள்.

கேள்வி – உங்கள் மனைவி நல்ல கரகாட்ட காரர், அவரை ஏன் பாடகி ஆக்கினீர்கள்.
பதில் – நல்ல சிந்தனைகளை நாட்டுபுறபாடல்கள் மூலம்தான் மக்களுக்கு கொடுக்கமுடியும். நல்ல சிந்தனைகள் சீக்கிரமாக மக்களை அடைய இந்த நாட்டுபுறபாடல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நல்ல பாடல்களை மக்களிடம் பாடிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் ஏற்பட்டது. என் மனைவி கரகம் ஆடும் போது கூட நல்ல குரலில் கணீர் என்று பாடுவார். எனவே அவர் பாடலை மக்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே கச்சேரி செல்லும்போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவே அவர் பாட ஆரம்பித்துவிட்டார். பழைய பாட்டுகளில் புதிய செய்திகளை நாங்களே சேர்த்துக்கொண்டு பாடுகிறோம். எங்களுக்கு நிகழ்ச்சி தருபவர்கள் என்ன கரு தருகிறார்களோ..அதற்கு ஏற்ப பாடல்களை உருவாக்கி பாடுகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கேள்வி – உங்களை போன்ற நாட்டுபுற கலைஞர்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்கிறீர்களா?, அல்லது இல்லை என்று கூறுகிறீர்களா?.
பதில் – அதாவது ஆபாசமான கலைக்குத்தான் இடமில்லை என்று சொன்னேன். நல்ல கலைக்கு மரியாதை எப்போதுமே இருக்கிறது. தற்போது கூட எனது மனைவி நிகழ்ச்சியில் பாடும் அம்பை சண்முகம் என்னும் மாற்று திறனாளி பையனை நடிகை ரோகிணி எங்கள் வீட்டுக்கு வந்து பாடகேட்டு, அவரை இனங்கண்டு, அவர் டைரக்ட் செய்யும் “அப்பாவின் மீசை” என்ற படத்தில் பாட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதே போல் டைரக்டர் ராட்டினம் தங்கசாமி என்பவர் தனது படமான “எட்டு திக்கும் மதயானை” என்னும் படத்தில் அவருக்கு பாடல் காட்சியில் நடிக்க சான்ஸ் கொடுத்து இருக்கிறார்கள். அதே போல் எங்கள் ஒயிலாட்ட கலைஞர் கலைமாமணி கைலாச மூர்த்தி அவர்களும் சினிமா வில் நடிக்கிறார்கள். எங்களுக்கு திறமை இருக்கிறது. ஆகவே நாங்கள் இருக்கும் இடத்துக்கே சினிமாகாரர்கள் எங்களை தேடி வருகிறார்கள் என்றால் அது எங்கள் திறமைக்கு கிடைத்த பரிசுதானே. தற்போது நல்ல ஆட்டகாரர்களை மதிக்க ஆள்கள் உள்ளார்கள். அதனால் தான் என்னை போன்ற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது எல்லாம் கிடைக்கிறது. அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

கேள்வி – காவடி ஆட்ட கலையில் உங்களை தவிர தற்போது யாரும் இருந்த மாதிரி தெரியவில்லையே.
பதில் – ஆம். கடையனோடை இசக்கி என்று ஒரு காவடி ஆட்டக்காரர் இருந்தார். அவர் காவடியை தலையில் வைத்துக்கொண்டு உரலில் நின்று , அந்த உரலை காலால் நகர்த்தியே ஆடுவார். அவர் சென்னையில் தற்போது வசிக்கிறார் என்கிறார்கள். எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் தற்போது தென் தமிழகத்தில் காவடியாடும் பழமையான கலைஞர் நான் மட்டுமே.. என்று நினைக்கிறேன். எனக்கு தற்போது 69 வயதாகிறது. கடையனோடை இசக்கி அவர்களுக்கு 90 க்கு மேல் வயதிருக்கும்.

கேள்வி – தற்போது காவடி யாட்டம் கலை எப்படியிருக்கிறது?. யாரெல்லாம் உங்களை பயன்படுத்துகிறார்கள்.?
பதில் – பாளையங்கோட்டை சேவியர் நாட்டார் வழக்காற்றியல் மன்றத்தில் எங்களை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்துவார்கள். அது போல கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு காவடியாட்டம், கரகாட்டம் சொல்லிக்கொடுக்க எங்களை அழைப்பார்கள். நிகழ்ச்சி நடத்தவும் கூப்பிடுவார்கள். மாணவ, மாணவிகளில் மிகுந்த கைதட்டலோடு எங்கள் கலைநிகழ்ச்சி நடைபெறும். மற்றபடி கோயில் கொடை போன்ற கிராம புற நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்தால் அங்கே சென்றும் நிகழ்ச்சி நடத்தி தருகிறோம். அரசின் திட்டங்களை விளக்கி பேச, அரசு எங்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனாலும் பெரிய அளவில் எங்களுக்கு வருமானம் இல்லை. ஆகவே தான் என் மனைவி பூக்களை தொகுத்து பூ வியாபாரம் பார்த்து வருகிறார். எங்களை போன்ற கலைஞர்களை அரசு தான் வாழ வைக்கவேண்டும் என்றார்.
அவரின் பேட்டி ருசிகரமாக இருந்தாலும் கூட கடைசி நேரத்தில் மனதை வருடுவதாகவே இருந்தது.
தற்போது நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் ஒரு ஓட்டு வாடகை வீட்டில் வசிக்கும் சங்கரபாண்டியன் சாந்தி தம்பதியினர் தங்களது நீங்காத நினைவுகளாக அனைஞ்சி பெருமாள்தேவர், ருக்குமணி அவர்களின் போட்டோவை பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். இவர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் எங்கு சென்றாலும் கூட அந்த போட்டோவை பத்திரமாக தூக்கி கொண்டு செல்கிறார்கள். இவர்கள் தங்களது கலை மீது வைத்திருக்கும் பண்பை அது காட்டுகிறது. ஆனாலும் இவர்கள் பின்னாலேயே ஏழ்மையும் சுற்றி செல்வதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
சுமார் 62 வருடங்களாக கலைஞர்களாக வாழும் சங்கரபாண்டியன் – சாந்தி தம்பதியினர் தற்போது தங்களது தள்ளாத வயதில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை.
காவடியாட்டத்தில் நெல்லை சீமையை பொறுத்தவரை கலைமாமணி சங்கரபாண்டியன் மட்டுமே உள்ளார். இவருக்கு கலை வாரிசுகளாக இந்த காவடியாட்டத்தினை யாரும் படிக்கவில்லை. இது நமக்கு ஒரு பெரும்குறையாகவே உள்ளது.
ஆனாலும் காவடியின் பெருமை காவடிசிந்து உருவாகிய நெல்லை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக உள்ளது என்பது நமக்கு மிகவும் பெருமையான விசயமேயாகும்
இன்று நம்மோடு கலைமாமணி சங்கரபாண்டியன் இல்லை. ஆனாலும் அவரது புகழ் என்றுமே மறையாது. அவரது துணைவியார் சாந்தியம்மாளுக்கும், குடும்பத்தாருக்கும் இறைவன் ஆறுதல் தர வேண்டுகிறேன்.