மணிமுத்தாறு 3-4 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி கருகிய பயிர்கள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை.

மணிமுத்தாறு 3 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியுள்ளது. எனவே அரசு தலையிட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேரகுளம் சுற்று வட்டாரப்பகுதியில் மணிமுத்தாறு பாசன குளங்கள் உள்ளன. மணிமுத்தாறு அணை பாசனம் 3 வது 4 வது ரீச் மூலமாக இங்குள்ள சுமார் 30க்கு மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகிறது.

கீழசிரியந்தூர் குளம், செம்பராபேரிகுளம், தெற்குகாரசேரி குளம், கிளாக்குளம், குருகால்பேரி குளம், வெட்டிகுளம், தீராத்தி குளம், இலுப்பைகுளம், சேரகுளம், வல்லகுளம், அரசர்குளம், மல்லல் புதுக்குளம், திருவரங்கபட்டி குளம், கோவை குளம், வசவப்பநேரி குளம் உள்பட பல குளங்கள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே மணிமுத்தாறு நீரையை விவசாயத்திற்காக நம்பியுள்ளனர். தற்போது மணிமுத்தாறு அணையில் 96 அடி தண்ணீர் உள்ளது. 80 அடிக்கு மேலே தண்ணீர் இருந்தால் மணிமுத்தாறு 1, 2, 3, 4 வது ரீச்சிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது அரசு விதி. கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து மணிமுத்தாறில் திறந்து விடப்பட்டது. இதை நம்பி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆனால் தண்ணீர் திறந்தும் இந்தப் பகுதிக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை. தற்போது மணிமுத்தாறு தண்ணீரை நம்பி சாகுபடி செய்த நெல் பயிர்கள் 20 நாள்களில் அறுவடை செய்ய வேண்டும்.

ஆனால் போதிய தண்ணீர் இல்லாமல் அனைத்து நெல்பயிர்களும் கருகி விட்டன. இதனால் விவசாயிகள் மனமுடைந்து உள்ளனர்.

இதுகுறித்து சேரகுளத்தினைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கணேசன் கூறும் போது, கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக ஒரு மாதம் தண்ணீர் தற்போது எங்கள் பகுதி குளத்தில் இருந்தது. அதை நம்பி நாங்கள் பயிர் செய்ய ஆரம்பித்து விட்டோம். ஆனால் இது போதுமானது அல்ல. எனவே மணிமுத்தாறு அணையை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரியிருந்தோம். கடந்த டிசம்பர் 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மணிமுத்தாறு கால்வாய் 3 வது மற்றும் நான்காவது ரீச்சிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. தற்போது 15 நாள்கள் தண்ணீர் இருந்தாலே பயிரை அறுவடை செய்து விடலாம். ஆனால் குளத்திலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் வற்றி விட்டது. எனவே இங்குள்ள சுமார் 30 குளத்து பாசனத்தில் செய்யப்பட்ட நெல் பயிர்கள் கருகி விட்டனர். இதனால் முதல் போட்ட விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். எனவே மணிமுத்தாறு தண்ணீரை முறைப்படி திறக்காவிடில் இந்த பகுதியில் நட்ட பயிர்கள் கருகியே போய் விடும். எனவே உடனடியாக 3வது மற்றும் 4 வது ரீச்சிக்கு தண்ணீர் விட வேண்டும் .
என்றுகூறினார்.

தற்போது 1 வது மற்றும் 2 வது ரீச் விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். 80 அடி வரை தான் இங்கு தண்ணீர் திறக்க இயலும். தற்போது 96 அடியே உள்ளது. இந்த 16 அடி தண்ணீரை கடை மடையில்இருந்து முறை வைத்து வழங்கினால் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் நலம் பெற முடியும். கருகும் பயிரை காப்பாற்ற முடியும் எனவே ஆவண செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.