6 நதிகளை தாண்டி தீபம் ஏற்றும் பெண்

தாமிரபரணி நதி.
வற்றாத ஜுவ நதி. இந்தநதி பொதிகை மலையில் தோன்றி வங்களா விரிகுடாவில் புன்னகாயல் என்னுமிடத்தில் கலக்கிறது.
புன்னகாயல்.
2500 வருடங்களுக்கு முன்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய பாண்டியரின் கொற்றை துறைமுகம் அருகில் இருக்கும் அற்புதமான ஊர். தமிழகத்தின் முதல் அச்சுகூடம், முதல் கல்லூரி உள்பட பல சிறப்புகளை அடங்கிய பெருமைக்கு சொந்தக்காரர்கள் வாழும் ஊர்.
புன்னகாயலில் தாமிரபரணி ஆறு கடலுடன் இணையும் இடத்தினை சங்குமுக தீர்த்தம் என்கிறார்கள்.
அகத்திய பெருமான், கடலரசன் உள்பட பல சித்தர்கள் இங்கு நீராடி நற்கதி பெற்றனர். எனவே இவ்விடத்தில் தீர்த்தம் எடுத்து கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்தால் சிறப்பு.
இந்த தீர்த்தம் எடுப்பதற்காக நதி கடலுடன் கலக்கும் அதிசயம் மிக்க புனித இடத்துக்கு சவாலான பயணத்தில் செல்வார்கள்.
இவ்விடத்துக்கு புன்னகாயல் அல்லது பழையகாயலில் இருந்து படகு மூலம் செல்லலாம்.
நடந்து செல்லும்போது நல்ல வழிகாட்டி வேண்டும்.
ஏன் என்றால் இங்கு தாமிரபரணி நதி ஆறு பிரிவாக பிரிகிறது. ஆங்காங்கே பல தீவுகளை கொண்டுள்ளது.
செல்லும் மக்கள் இந்த தீவுகளையும் ஆற்று பிரிவுகளையும் கடந்து தான் செல்லவேண்டும்.
அதிகமான புதைகுழிகள் இங்கு உண்டு.
செல்லும் போது தண்ணீர் குறைவாக இருக்கும், ஆனால் வரும் போது மனிதர்களையும் மூழ்கடித்து விடும்.
சங்கு முகத்துக்கு தீர்த்தம் எடுக்க செல்பவர்கள் மூழ்கி தீர்த்தம் எடுத்து விட்டு, திரும்பும் முன்பு கடல் அலை அடித்து அவர்களை இழுத்தும் சென்று விடும்.
அந்த அளவுக்கு சீறிப்பாயும் கடல் அலையும், அமைதியாக இருந்து உள்ளே நம்மை இழுத்து கொள்ளும் அகழிகளையும் கொண்ட இடம்.
ஆனால் இங்கு ஒரு பெண் ஓசையே படாமல் சாதனை ஒன்றை புரிந்து வருகிறார் என்பது தான் ஆச்சரியம்.
புன்னகாயலில் இருந்து ஆறு இடங்களில் ஆற்றைத்தாண்டி ஒரு பெண் தினமும் தீவுக்குள் இருக்கும் புனித தோமையார் ஆலயத்துக்கு தீபம் ஏற்ற நடந்தே செல்கிறார்.
அவர் பெயர் ரமீ.
திருவிழா காலங்களில் கூட பல படகுகள் இங்கு வந்தாலும் இந்த பெண் அதில் ஏறுவதே கிடையாது.
ஆச்சரியமான அந்த பெண்ணை காண புன்னகாயலில் இருந்து படகில் பயணம் சென்றோம்.
படகு புன்னகாயல் முகத்துவாரத்தில் கிளம்பி கடலுக்குள் சென்று பின் திரும்பி தாமிபரணி ஆற்றுக்குள் நுழைந்தது.
ஆர்பாரிக்கும் அலை.. “நன்றாக பிடித்துக்கொள்ளுங்கள். காமராவை உள்ளே வையுங்கள்.. அலை வித்தியாசமாக அடிக்கிறது. படகு கவிழ்ந்தாலும் கவிழந்து விடும்” என படகோட்டியின் எச்சரிக்கை எங்களை திடுக்கிட வைத்தது.
பார்க்கும் தூரத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் தெரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் அலைகளும் எங்களை மிரட்டியது.
ஆனாலும் அதை எல்லாம் மீறி தாமிரபரணி ஆற்றுக்குள் எங்கள் படகு விரைந்தது.
அந்த இடம் தான் சங்குமுக தீர்த்தம்.
புனித தீர்த்தம்.
கை இரண்டையும் மேலே தூக்கி வணங்கி விட்டு மீண்டும் படகில் தாமிரபரணி திசையில் எதிர்நோக்கி பயணம் செய்தோம்.
தூரத்தில் புனித தோமையார் ஆலயம் தெரிந்தது.
ஆனந்தம்.
கடலுக்குள்ளே அலைகள் உரச அருகிலேயே இருந்தது ஆலயம். சிறிய தீவு தான். அங்கே சென்றோம். அசனம் நடந்து கொண்டிருந்தது.
வேண்டுதல் நிறைவேறினால் உடனே இங்கு வந்து அசனம் செய்பவர்கள் ஏராளம். தவம் இருப்பதற்காக குடில் கட்டப்பட்டு இருந்தது. அதில் பலர் தவமேற்றி கொண்டிருந்தனர்.
அங்கு தான் ரமீ அம்மாள் சிலுவையில் எண்ணெய் தோய்த்து பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தார்.
“இது சாதரண சிலுவை இல்லை. ஒரு காலத்தில் இந்த தீவில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்களுக்கு கடலில் இருந்து வந்து கிடைத்த சிலுவை. உயிரோட்டமாக குரல் கொடுத்து அவர்கள் மூலமாக இந்த இடத்துக்கு வந்த சிலுவை. இந்த சிலுவையில் எண்ணெய் தோய்த்து பக்தர்களுக்கு கொடுத்தால் நோயெல்லாம் தீர்ந்து விடும்” என்றார்.
இவர் வரும் பக்தர்களுக்கு வெள்ளை கயிறு ஒன்றை கையில் கட்டி விடுகிறார். அடுத்த வருடம் வரும்போது திருமணம் முடிந்து விடும் என்றும் தீர்க்கமாக சொல்கிறார். நடந்து விட்டது என்று மறுவருடம் ஜோடியுடன் வரும் மக்கள் சாட்சியாகிறார்கள்.
இந்த தீவுக்கு தினமும் புனித தோமையார் ஆலயத்துக்கு தீபம் ஏற்ற ரமீ வரும் செயலே மிக வித்தியாசமானது.
தினமும் புன்னகாயலில் இருந்து 6 பிரிவாக ஓடும் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி, குட்டி தீவில் ஏறி வருகிறார்.
“தோமையாரை நினைத்துக்கொண்டு அரை மணிநேரத்தில் வந்து விடுவேன். நமக்கு இந்த படகெல்லாம் ஒத்து வாராது.. கூட்டம் அதிகம் வந்து படகில் கூப்பிட்டாலும் போக மாட்டேன்”.
என்றார்.
“சரி… அமாவாசை, பௌர்ணமி காலத்தில் கடல் பொங்குமாமே. அந்த நேரம் எப்படி வருவீர்கள்?.” என்று கேட்டால், “எனக்கு தெரியும். சூரியன், நிலவு இதை பார்த்துக்கொண்டு. எப்போது கடல் பொங்கும் எப்படி பொங்கும் என்பதை அறிந்து கொண்டு ஆறுகளை கடந்து கோயிலுக்கு வந்து தீபம் போடுவேன்”. என்றார்.
ரமீ அக்காளுக்கு திருமணம் ஆகவில்லை. புனித தோமையார் ஆலய சேவைக்காகவே வாழ்ந்து வருகிறார். தாத்தா ஜோசப் காலத்திலேயே இந்த கோயில் கணக்கு பிள்ளையாம். அவருக்கு பிறகு மாமா அந்தோணி பர்னாந்து, பெரியம்மாள் பிரகாசியம்மாள், தொடர்ந்து ரமீ என ஆலயபணியை தொடர்ந்து வருகிறார்கள். ரமீ அக்காள்.. தனது 6 வயதில் தீபம் போட வந்தவர் தற்போதும் 50 வயது ஆகியும் அதை விடாமல் செய்து கொண்டிருக்கிறார்.
முன்பெல்லாம் இங்கு நரி, நாகம் போன்ற கொடிய விலங்குகள் வசிக்கும். ஆனால் தோமையார் புண்ணியத்தில் எங்களை எதுவும் செய்யாது என்று சொன்னவர். இறுதியாக சொன்ன சொல் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“எங்கள் ஊருக்கு சவேரியார் சொன்ன வாக்கு. நீராலும் நெருப்பாலும் அழிவு வராது. சுனாமி வந்த போது ஒரு பனை உச்சிக்கு அலைகள் எழும்பியது. புன்னகாயலே அழிந்து விடும் என்றார்கள். பலர் ஊரை காலி செய்து விடலாம் என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால் சவேரியார் கோயிலில் அவர் சுருபத்தின் பாதத்தினை கழுவி அந்த தண்ணீரை கொண்டு வந்து கடலில் ஊற்றினோம். என்ன ஆச்சரியம் ஆழி பேரலை அங்கு வராமலேயே சென்று விட்டது” என்றார்.
இவரது செயல் ஆச்சரியமாக இருந்தாலும் இவரது நம்பிக்கை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.