பொங்கலும் – தபால் அட்டையும்

பொங்கல் விழா வந்தாச்சு.. 1988 ஆம் ஆண்டு காலங்களில் பொங்கல் வாழ்த்து கொண்டு வரும் தபால் காரரை தெருவோரம் வரை வந்து வரவேற்று , அவர்களிடம் வாழ்த்து அட்டையை பெற்று செல்வோம். வாழ்த்து அட்டையை சேகரிக்க நகரத்துக்கு வருவோம். நெல்லை சந்திப்பு, பாளை பஸ்நிலையம் , பாளை சந்தை உள்பட முக்கிய புத்தக கடையில் வகை வகையாக தபால் அட்டைகள், வாழ்த்து அட்டைகள் குவிந்து கிடக்கும். இதற்காக பள்ளி காலங்கள் பணம் சேர்த்து பஸ் ஏறி கார்டு வாங்கி, வேறு யாரவது அனுப்பாவிட்டாலும், தனது விலாசத்துக்கு தானே வாழ்த்து மடல் போட்டு, அதை தபால் காரர் கொண்டு வரும் வரை காத்து கிடந்த காலங்கள் பொற்காலங்கள்.
தனக்கு வாழ்த்து யாரும் அனுப்பி விட்டால் போதும், உடனே நன்றி அட்டை அனுப்பவும் நெல்லைக்கு பஸ் ஏறி விடுவோம்.கிராமத்தில் ஒருவருக்கு வெளியூரில் இருந்து வாழ்த்து மடல் வருகிறது என்றால் அவர்தான் மிகப்பெரிய செல்வாக்கான ஆள் என அர்த்தம்.
ஆனால் இன்று முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், எஸ்.எம்.எஸ், மெயில் என வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நாம் அட்டையை மறந்தே போய் விட்டோம்.
இந்த பொங்கலுக்கு எனக்கு மூன்று வாழ்த்து மடல் வந்தது. மிக சந்தோஷமாக இருந்தது. அய்யா எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் மணிகட்டி பொட்டலில் இருந்து ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார். வழக்கறிஞர் பாரதி முருகன் ஒருவாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார். எழுத்தாளர், ஆசிரியர் பாப்பாக்குடி இரா செல்வமணி அய்யாவும் அழகிய வண்ணத்தில் தமிழ்தாயுடன் அவரது படத்தினையும் வண்ணகலரில் அச்சிட்டு வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார்.
அதை கையில் வாங்கி பார்க்கும் போதே சந்தோஷம். என்னதான் நவீன யுகத்தில் நாம் பொங்கல் வாழ்த்து கூறினாலும். இதுபோன்ற வாழ்த்தை பெறும் போது சந்தோஷத்திற்கே அளவில்லை.
ஏன்என்றால்.
1.இந்த கடிதங்கள் நமக்காக மட்டுமே எழுதப்பட்டவை.
2.மற்றவர்கள் வாழ்த்தை காப்பி செய்து நிச்சயம் பேஸ்ட் செய்து இருக்க மாட்டார்கள்.
தனித்தத்துவம் கொண்ட வாழ்த்து மடல் என்றென்றும் நிலைத்து நிற்கும். எனவே இந்த பொங்கலுக்கு வாழ்த்து அனுப்பிய மூன்று பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற அட்டைகளை சுமார் 300க்கும் மேல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன்.
எழுத்தாளர் இளசை அருணா அய்யா அவர்களின் அழகான கையெழுத்தும், எனக்கு ‘பொருநை செல்வர்’ பட்டமளித்த குறிஞ்சி செல்வர் கோதண்டம் அய்யா கடிதமும் இதுவரை வரவில்லை என்பது ஏமாற்றம் தான்.
முறப்பநாடு நண்பர் சிற்றம்பலம், திடியூர் ஈஸ்வர மூர்த்திஅய்யா போன்றவர்கள் கடிதம் வந்தும் பல நாள்கள் ஆகி விட்டது. வானொலி நேயர்கள் கடிதம் எழுதுவதில் வல்லவர்கள். அவர்களில் கூட உக்கிரன் கோட்டை மணி போன்றவர்கள் முகநூலுக்குள் நுழைந்து விட்டனர்.
சரி…எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்ல தபால் எழுத முடியாமல் நானும் சேம்பேறி ஆகி விட்டேன். ஆகவே.. இதையே எனது வாழ்த்தாக நினைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே… இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.