கடந்த வருடம் நான் சந்தித்த அபூர்வ மனிதர்கள்

கடந்த வருடம் சிறப்பாக முடிந்து விட்டது. திங்கள் கிழமை புது வருடம் பிறக்க போகிறது. கடந்த வருடத்தினை திரும்பி பார்கிறேன். பல நல்ல மனிதர்களை இந்த வருடம் சந்தித்துள்ளேன். அவர்களை பற்றி தனி தனிக்கட்டுரை ஏற்கனவே பல எழுதியுள்ளேன். பல ஏமாற்றங்களையும் தாங்கியுள்ளேன்.அதை எழுதாமல் உங்களிடம் இருந்து மறைத்தும் இருக்கிறேன். அதே வேளையில் என் மனதை விட்டு நீங்காத இரண்டு நபர்களை பற்றி கூறிய ஆக வேண்டும்.
ஒருவர், கருங்குளம் ஒன்றிய ஆணையாளராக பணியாற்றிய திரு . சந்தோஷ் அவர்கள். நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் உடனடியாக செய்து முடிப்பார். அவர் செய்த சிறப்பான பணி செய்துங்கநல்லூர் சந்தையை விரிவு படுத்தியது.
மிகவும் பழமையான போர்ச்சீகிசியர் காலத்தில் உருவாக்கப்பட்ட சந்தை கலெக்டர் மாலிக் பொரெஸ்கான் காலத்தில்(1997) சீர் செய்யப்பட்டது. அதன் பின் சீரமைக்க வில்லை. தற்போது பெருகி வரும் இந்த சந்தையை விரிவு படுத்தி சமுதாய நலக்கூடம் வரை நீட்டி தந்தார்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த சந்தையை விரிவு படுத்தி தந்த காரணத்தினால் தற்போது சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பயனடைகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் மிக அதிகமாக வியாபாரிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
அவருக்கு எங்கள் செய்துங்கநல்லூர் மற்றும் சுற்று பகுதி கிராம மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது இவர் கருங்குளம் ஒன்றியத்தினை விட்டு பணி மாறுதல் பெற்றுள்ளார். அவரை வாழ்த்துகிறேன்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு கிடைக்க வேண்டும் என முற்றிலும் எளிய மக்களை தேடி கண்டு பிடித்த அவரை மறக்க முடியுமா?
இரண்டு செய்துங்கநல்லூரை சேர்ந்த திரு சமீம் அவர்கள். நல்ல நண்பர். செய்துங்கநல்லூரில் பல குருதி கொடையாளர்கள் உள்ளனர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிக அதிகமானவர்கள் இங்கு உள்ளனர்.
ஆனாலும் ஒருவர், தனது வேலையை ஒத்தி வைத்து விட்டு, கடையை அடைத்து விட்டு, யாரோ முன்பின் தெரியாத ஒருவருக்காக கொட்டும் மழையில் தனது பைக்கில் பயணித்து குருதி கொடை கொடுத்து விட்டு வந்தார். அவரையும் மறக்க முடியாது. இது போன்ற நல்லவர்கள் உள்ளவரை, கொட்டும் மழையும் பெய்யும். பூமி விளையும். நன்மை பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.